ARTICLE AD BOX
காலையில் எழுந்ததும் காபி குடித்தால் தான் சிலருடைய வேலை தொடங்கும். காலையில் காபி அருந்துவது உண்மையில் உங்களுக்கு சுறுசுறுப்பையும், புத்துணர்வையும் அளிக்கும். ஆனால் இரவில் காபி அருந்தக் கூடாது. ஏனென்றால் தூக்கத்தை தடுக்கும் ஆற்றலும் காபிக்கு உண்டு. அதனால் காலையில் அருந்த காபி சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் செய்யப் போகும் வேலையில் அதிக ஆற்றலுடன் செயல்பட காபி உங்களுக்கு உதவுகிறது. இந்த பதிவில் வெறும் பாலில் தயார் செய்யும் காபி அல்லது பால் கலக்காத பிளாக் காபி தவிர மற்ற காபி வகைகளை தெரிந்து கொள்ளலாம்.
கிரீன் காபி:
நீங்கள் உடற்பயிற்சி செய்யும் நபராக இருந்தால் உடற்பயிற்சிக்கு முன்பு அல்லது காலை எழுந்ததும் கிரீன் காபி குடிக்கலாம். சாப்பாட்டுக்கு முன் அல்லது பின்பு 2 முதல் 3 மணி நேரம் அருந்தலாம். இந்த காபியை தயாரிப்பது எளிது தான். ஆன்லைனில் கிரின் காபி பீன்ஸ் என சொல்லப்படும் உடைக்காத பச்சை காபி கொட்டைகள் கிடைக்கும். அதை வாங்கி ஒன்றிரண்டாக பொடி செய்து வையுங்கள். இதை கொதிக்கும் நீரில் போட்டு குடித்தால் கிரின் காபி தயார். இந்தக் காபி கருப்பாக இல்லாமல் இலேசான பச்சை வண்ணத்தில் மணமாக இருக்கும். தேன், எலுமிச்சை சாறு கலந்து அருந்தலாம்.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ 'இந்த' பிரச்சனைகள் உங்களுக்கு வரும்!
பயன்கள்:
- உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த காபியை சர்க்கரை கலக்காமல் அருந்தலாம். இப்படி அருந்துவதால் நீரிழிவு நோய், இதய நோய் அபாயம் குறையும்.
- தலைவலியை குணமாக்கும். மறதி நோயான அல்சைமருக்கு நல்லது. பார்க்கின்சன் நோய் இருப்பவர்களும் அருந்தலாம்.
கருப்பு காபி:
பால் சர்க்கரை சேர்க்காத பிளாக் காபி என்ற கருப்பு காபி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த காபி உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். பொதுவாக தீவிர உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் காலையில் பிளாக் காபி குடிப்பார்கள். இது உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்க உதவுகிறது. இந்த காபி கெட்ட கொழுப்பை குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் சர்க்கரை சேர்க்கக் கூடாது என்பது முதன்மை விதியாகும்.
இதையும் படிங்க: சாப்பிட்டதும் காபி குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? உடனே நிறுத்துங்க..ஆபத்து காத்திருக்கு
சுக்கு காபி:
சுக்கு காபியை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. காலையில் குடிக்க நினைத்தால் தண்ணீர் குடித்துவிட்டு அருந்துங்கள் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்னர் அருந்தலாம். சுக்கு, ஏலக்காய் ஆகியவை கலந்து பொடி செய்து கொதிக்கவிடுங்கள். நீங்கள் சேர்த்த தண்ணீர் பாதியாக வற்றியதும் வடிகட்டி அதனுடன் பால், பனஞ்சர்க்கரை போட்டு குடிக்கலாம். இதை காலை அருந்துவதை விட மாலை குடிப்பது நல்லது. இந்த காபியில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின் போன்றவை உள்ளன. உடலுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகள் நீங்கும். சளி, கபம் நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இந்த காபி சிறந்த ரத்தச் சுத்திகரிப்பான் எனலாம்.
பேரீச்சம் பழ விதை காபி
பேரீச்சம் பழ விதைகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த விதைகளை தூக்கி எறியாமல் அதை மொத்தமாக சேர்த்து வைத்து வறுத்து எடுத்து கொள்ளுங்கள். அந்த பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து 1 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து இறக்குங்கள். இதில் காய்ச்சிய பால் சேர்த்து பனங்கற்கண்டு போட்டு வாரம் ஒரு முறை குடித்தாலே பல நன்மைகள் கிடைக்கும். ரத்தசோகை வராமல் தடுக்கும். தாது உற்பத்தி, ரத்த உற்பத்திக்கு நல்ல பலனளிக்கும். சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. நினைவாற்றல் அதிகமாக இந்த காபியை குடிக்கலாம்.
ஏலக்காய் காபி
ஏலக்காய் காபி குடித்தால் அடுத்த முறையும் குடிக்கத் தோன்றும் அளவில் சுவையாக இருக்கும். முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் காபித் தூள், சர்க்கரை போட்டு அதில் கொஞ்சமே கொஞ்சம் நீர் விட்டு பேஸ்ட் போல செய்யுங்கள். பாலையும், தண்ணீரையும் கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காயை விதை நீக்கி போடுங்கள். அதிகமாக கொதிக்ம விட்டால் ஏலக்காய் வாசனை போய்விடும். அதனால் அடுப்பை மிதமான தீயில் வையுங்கள். கொதித்த பின்னர் தேவையான காபித்தூள் சர்க்கரை பேஸ்டை டம்ளரில் போட்டு பாலில் கலக்கவும். பின்னர் மேற்புறம் சிறிது காபி தூள் தூவினால் ஏலக்காய் காபி தயார். இந்த காபியில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வைட்டமின் சி காணப்படுகிறது. அஜீரணம் வராது. இது சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் நல்ல காபி. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் குடிக்கலாம்.