காடும் மலையும் எங்கள் கூட்டம்!

14 hours ago
ARTICLE AD BOX

-பத்மா

ம்மாசிக் கிழவன் தோளில் சுமந்து வந்த வெள்ளாட்டுக் குட்டியை இறக்கிவிட்டு மற்ற ஆடுகளையும் விரட்டினான். வழக்கப்பட்ட மரத்தடியில் படுத்த ஆட்டு மந்தை, வயிறார மேய்ந்த புல்லை அரைக்கண் மூடி அசை போட்டது.

அம்மாசிக் கிழவனுக்கு கொஞ்ச நாட்களாகவே மனசு சரியில்லை. கம்பீரமாகக் காட்சியளிக்கும் மலைத் தொடரை நிமிர்ந்து பார்த்தான். கொஞ்ச நாட்களாக மரங்கள் திடீரென்று காணாமல் போகின்றன. காட்டிலாக்கா அதிகாரி அந்த இடத்தைச் சுற்றி வேலி போட வைக்கிறார். காரணம் கேட்டால் சொல்ல மறுக்கிறார். மலையில் அங்காங்கு இருக்கும் சந்தன மரங்களைப் பற்றி அம்மாசிக்குப் பெருங் கவலை.. அவற்றை பெண் குழந்தையாக மலைவாழ் மக்கள் நேசிப்பார்கள். சந்தன மரம் தன்னுடைய இயல்பான மணத்தைப் பெற பதின்மூன்று பதினைந்து வருடங்கள்வரை ஆகும் என்று அவர்களுக்குத் தெரியும். அதை பெண் பூப்பெய்தும் சடங்காகக் கருதி மரத்துக்கு விசேஷப் பூஜை நடத்துவார்கள். இயற்கையிடம் அத்தனை பிரேமை, பக்தி.

சில்லென்ற நீர்த்திவலைகளை அருவியிலிருந்து அள்ளி வந்த காற்று பனித்தூவலாய் அம்மாசியை வருட, அவன் யோசனையிலிருந்து மீண்டான். மலையில் அங்காங்கு வெள்ளிக் கம்பியாய் இறங்கும் அருவிகளை தினந்தோறும் பார்த்தாலும் அலுக்காத காட்சி. காற்றோடு வந்த பால் பிடித்த சோளக் கதிர்களின் வாசம் மகிழ்ச்சியைத் தந்தாலும் இந்த வாழ்க்கை நீடிக்குமா என்ற கவலையும் கூடவே எழுந்தது அம்மாசிக்கு. சமீப காலமாக யார் யாரோ பெரிய மனிதர்கள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். கோட்டு சூட்டுப் போட்டவர்கள் எல்லாம் அவர்களுக்குப் பெரிய மனிதர்கள். மலையை அங்குமிங்கும் அளப்பதும் பாறையை உடைப்பதும் மண்ணை எடுத்துக்கொண்டு போவதும் மலைவாசி களுக்குப் புரியாத பாஷையில் பேசினாலும் தங்களுக்குப் பொருந்தாத ஏதோ ஒன்று நடக்கப் போவதின் முன்னறிவிப்பு என்று அம்மாசியின் உள்ளுணர்வுக்குத் தெரிந்தது.

யதில் முதியவன், அனுபவசாலி, சுலபமாகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவன் என்ற முறையில் அம்மாசிக் கிழவன், அந்த மலை வாழ் மக்களின் தலைவனாக மதிக்கப்பட்டு வந்தான். ஒருநாள் வெள்ளையும் சொள்ளையுமாக இருந்த இரண்டு பெரிய மனிதர்களுடன் வந்த காட்டிலாக்கா அதிகாரி, மலை வாழ் மக்களின் மொழி தெரிந்தவர் சொன்னதைக் கேட்டதிலிருந்து அம்மாசிக்கு பயங்கரக் கோபமும் மன வருத்தமும்.

''காலம் காலமா எங்களைப் போன்ற சனங்களுக்கும் கணக்கேயில்லாத ஜீவராசிகளுக்கும் பெத்தத் தாயா இருந்து காப்பாத்திட்டு வர இந்த மலையை எந்தக் கேடும் செய்யாம, நம்ம பெரியவங்க நமக்கு ஒப்படைச்ச மாதிரி நம் வருங்கால சந்ததிகளுக்கு நாமும் அப்படியே ஒப்படைப்பதுதான் முறை, கடமை. எங்கள் உயிர் இருக்கும்வரை இந்த மலையையும் காட்டையையும் காப்பாற்றப் போராடுவோம்." அம்மாசிக் கிழவன் சாட்டையடியாகப் பேச, காட்டிலாக்கா அதிகாரி வந்தவர்களுக்கு மொழி பெயர்த்தார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; செக்யூரிட்டி
Short Story in tamil

"போலீசையும், துப்பாக்கியையும் பார்த்தால் இவங்க வீராப்பெல்லாம் பறந்துடும். பயந்து ஓடுவாங்க. இவங்களை மிரட்டித்தான் காலி பண்ண வைக்க முடியும்" என்று அதிகாரி யோசனை சொல்ல, வந்திருந்த அதிகாரிகள் இடத்தைக் காலி செய்தனர்.

அன்று இரவே அம்மாசி நிலா வெளிச்சத்தில் தன் சனங்களை ஒன்று கூட்டினான். “அடேய், நாம எல்லோரும் இனிமே சோத்தோடு மண்ணையும் சேர்த்துத்தான் தின்னப் போறோம். புரியும்படியாச் சொல்றேன். அது எங்கெங்கோ புதைஞ்சு கிடக்குன்னு கண்டுபிடிக்க இதுக்குன்னே பெரீய்...ய படிப்பு படிச்ச வெளிநாட்டுக்காரன் வந்துருக்கான். அவன் சரின்னு தலையாட்டிட்டான்னா மலையை வேட்டு வெச்சு உடைப்பாங்க! ஆயிரம் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கப் போகுதாம். காடு மொத்தமும் அழிச்சுடுவாங்க போலிருக்கு. அதனால நாம நம்ம இடத்தைக் காலி பண்ணிடணுமாம். நம்ம பிழைப்புக்கு அரசாங்கம் ஏதாவது வழி செய்யுமாம்.

"இந்த மலையும் காடும்தான் நமக்குத் தெரிந்தவை. இவை நம்மைப் பெற்ற தாய். பெற்ற தாய் நம் கண் முன்னாலே கொலை செய்யப்படுவதை, பார்த்து சகிச்சிட்டிருப்பீங்களா சொல்லுங்கடா?" என்று அம்மாசி ஆவேசத்தோடு கத்தினான்.

"அனுமதிக்க மாட்டோம்' என்று ஒரே குரலில் ஒத்துழைக்க அம்மாசிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இடைத் தரகர்களாலும் படித்த மேதை களின் சூழ்ச்சி வலையிலும் தாங்கள் விழாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் இருந்தது.

அம்மாசி மனம் தளரவில்லை. பிரச்னைகள் பெரிதாக வரும்போது, தாங்கள் குல தெய்வமாக வழிபடும் ஒரு மரத்தடியில், பௌர்ணமியன்று இரவுப் பூசை நடத்தி, கோரிக்கையைச் சமர்ப்பித்தால் சாதகமாகத் தீர்வு கிடைக்கும் என்பது மலைவாழ் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அம்மாசி, பூசை அறிவிப்பு விடுத்தான். மொத்த மக்களும் குழந்தைகள் உட்பட மரத்தடியில் கூடிவிட்டார்கள்.

புரியாத மொழியில் பாட்டும் வாத்தியங்களின் வினோத ஒலியும் இரவின் அமைதியில் துல்லியமாய்க் கேட்க, ஓர் ஈர்ப்பில் அதிகாரியுடன் வெளிநாட்டு துரையும் அந்த இடத்துக்கு வந்தார். மரத்தைச் சுற்றி சோளக் கதிர்கள், மலைத்தேன், கள், காய்கனி மூலிகைகள், இன்னும் எத்தனையோ பொருள்கள் படையலாகக் குவிந்திருக்கக் கூடியிருந்தவர்கள் கருவிகளை இசைத்துப் பாடிக் கொண்டிருந்தனர்

நடு நடுவே அம்மாசிக் கிழவன், தன் இரண்டு கைகளையும் உயர்த்தி, மரத்திடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். மரத்தோடு மனிதன் பேசுவது வினோதமாகத் தெரிய அந்த வெளிநாட்டுக்காரன் அதிகாரியிடம் அம்மாசியின் பேச்சை மொழி பெயர்க்கச் சொன்னார்.

'இந்த மலையும் காடும் எத்தனையோ சந்ததிகளை வளர்க்கப் போகிற தாய். அவள் அழிவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எங்கள் உடன் பிறப்புகளான மரம், செடி, கொடிகள், சுருள்கொம்பு ஆடு, காட்டுப்பன்றி, வெள்ளி மீன்கள், பஞ்சு மேகம்,அருவிகள் எல்லாம் மலை மற்றும் காட்டோடு சேர்ந்து அழிவார்கள். உடன் பிறப்புகளை விட்டு ஓடும் சுய நலமிகளல்ல நாங்கள். மனிதனுக்கு இயற்கையைப் போற்றும் நல்ல புத்தி கொடு. அது அளிக்கும் கொடை நிரந்தரமானது என்று புரியவை, எங்களைக் காப்பாற்று தாயே."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உறவின் பின்னல்!
Short Story in tamil

அம்மாசி மரத்திடம் வைத்த கோரிக்கையை அதிகாரி மொழி பெயர்க்க, அதே சமயம் அம்மாசி மரத்தை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்க, கூட்டமும் மண்டியிட்டு கைகளை உயர்த்தி விம்ம, அந்தக் காட்சி அயல் நாட்டானையே உலுக்கியது.

"இவர்களுக்கு மூட நம்பிக்கை அதிகம். எப்படியும் இரண்டொரு மாதங்களில் முடிவாகி வேலை தொடங்கினால் இவர்கள் இந்த இடத்தைக் காலி செய்தே ஆக வேண்டும். இவர்கள் இன்னமும் இந்த மரம் மலையையும் காட்டையும் காப்பாற்றித் தரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று அதிகாரி முடித்தார்.

பூசை முடிந்து ஒரு வாரத்துக்கெல்லாம் அம்மாசி அவசரக் கூட்டம் கூட்டினான். "அடேய் விஷயம் தெரியுமா? நம்ம மரச்சாமி நம்ம கோரிக்கையை ஏத்துக்கிட்டு நல்லபடியா முடிச்சிடுச்சு. பூசையன்னைக்கு வந்தாரே பெரிய அதிகாரி, அவர் மலையைக் கடைசியா பரிசோதிச்சுப் பார்த்துட்டு, "மலையில் புதைந்து கிடக்கும் தாதுப்பொருளை எடுக்க ஆகும் செலவு ரொம்ப அதிகமாகும். ஆகும் செலவை ஈடு கட்டும் அளவுக்கு லாபம் கிடைக்காது. அதனால் இந்த முயற்சியைத் தவிர்ப்பதுதான் நல்லதுன்னு முடிவா எழுதிட்டாராம்.

"அதனாலே நம்ம காட்டுக்கும் இனி எந்த லைக்கும் சேதமும் வராது."

அம்மாசி முடிக்கும் முன்பே, கூட்டம் ஆனந்தத்தில் அம்மாசியைத் தூக்கிக்கொண்டு ஒடி, மரத்தைக் கட்டி அணைத்து, அழுது, சிரித்து, தங்கள் நன்றியை வெளிப்படுத்தியது.

"மனிதன் இயற்கையைப் படைக்கவில்லை. அது உயிர் வாழ் இனங்களின் நன்மைக்காகத் தோன்றிய ஒன்று. அதை அனுபவிக்கும் உரிமை மட்டும்தான் மனிதனுக்கு உண்டு. கைம்மாறாக அதைப் பாதுகாப்பது அவன் கடமை. அதன் மீது ஆதிக்கம் செலுத்தினால் அழிவு நிச்சயம். அதற்கு சுனாமியில் மொத்தக் குடும்பத்தையும் இழந்து தனித்து நிற்கும் நான் ஒரு சிறு சாட்சி. 'இயற்கையை சரணடைந்து வாழ்வதுதான் நியாயம் என்பதை உணர்த்திய மலைவாசிகளுக்கு நன்றி. இயற்கையைப் பகுத்தறிந்து சோதிக்கும் இந்தப் பதவியிலிருந்து விலகுகிறேன்."

பூசையன்று இரவு, அந்த அதிகாரி தன் டயரியில் எழுதிய வரிகள் இவை என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

 பின்குறிப்பு:-

மங்கையர் மலர், செப்டம்பர் 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Read Entire Article