உலகமே காத்திருந்த தருணம்… விண்வெளி வீரர்களை மீட்ட மகிழ்ச்சியில் அமெரிக்கா..!

3 hours ago
ARTICLE AD BOX

விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ள பூமியில் இருந்து 408 கிமீக்கு மேலே சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சுமார் 6 மாதம் தங்கியிருந்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்வர். அடுத்த குழு வந்ததும், 6 மாத பணியை நிறைவு செய்தவர்கள் பூமிக்கு திரும்புவார்கள். விண்வெளி வீரர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தேர்வு செய்து அனுப்பி வைக்கும்.

அப்படியாக நாசாவால் விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டவர் சுனிதா வில்லியம்ஸ். இவர், ஏற்கனவே நாசாவால் 2 முறை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்துள்ளார். திறமையான போர் விமானத்தின் விமானியான சுனிதா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் தனது 3வது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். நாசாவும் போயிங் நிறுவனமும் இணைந்து தயாரித்த புதிய விண்கலமான இந்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி சோதிப்பதற்காக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் ஒரு வார பயணமாக புதிய ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றனர். ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதே விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் திரும்பி வர முடியவில்லை. ஸ்டார்லைனர் விண்கலம் மட்டும் காலியாக பூமிக்கு திரும்பியது. இதனால் அடுத்த குழுவை விண்வெளிக்கு அனுப்பும் போது மட்டுமே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவர்களை திரும்ப அழைத்து வருவதற்காகவே கடந்த செப்டம்பர் மாதம் 4 வீரர்களுக்கு பதிலாக 2 வீரர்கள் மட்டும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உள்ளிட்டோர் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.இந்த நிலையில், விண்வெளியில் 9 மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக அமெரிக்க வளைகுடாவில் தரையிறங்கியதை அடுத்து, விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ், நாசா மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் 286 நாட்கள் செலவிட்டனர், இது அவர்களின் உண்மையான திட்டத்தை விட 278 நாட்கள் அதிகம். அவர்களின் பயணம் முழுவதும், பூமியை 4,576 முறை சுற்றி வந்து 121 மில்லியன் மைல்கள் தூரத்தை கடந்து வீடு திரும்பினர் என்று கூறியுள்ளது.

வாக்குறுதி அளிக்கப்பட்டது, வாக்குறுதி செய்து முடிக்கப்பட்டது: ஒன்பது மாதங்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அதிபர் டிரம்ப் உறுதியளித்தார். இன்று, அவர்கள் அமெரிக்க வளைகுடாவில் பாதுகாப்பாக தரையிறங்கினர், எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசாவுக்கு நன்றி என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

Read Entire Article