ARTICLE AD BOX
செய்தியாளர்: கோகுல்
தாம்பரம் அருகே மணிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பாலகுமாரன் - வித்தியா தம்பதியர். இவர்களுக்கு ஆருத்ரா என்ற இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை வித்தியா துணிகளை துவைத்து காய வைப்பதற்காக அந்த அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்கு சென்று துணிகளை காய வைத்துள்ளார்.
அப்போது அவருடன் இருந்த குழந்தை ஆருத்ரா, மாடி படிக்கட்டில் பக்கவாட்டு கம்பி வழியே தவறி கீழே விழுந்துள்ளார். இதில், படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு முடிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டது. ஆனால், கிசிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இன்று உயிரிழந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மனிம்ங்கலம் போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.