ARTICLE AD BOX
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது புகையிலை மது தொடர்பான விளம்பரங்களை எந்த வகையிலும் ஒளிபரப்பக் கூடாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் அமைப்பின் தலைவர் அருண் சிங் துமாலுக்கு மத்திய சுகாதாரத்துறை சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் தொலைக்காட்சி விளம்பரங்கள், மைதானங்களில் உள்ள விளம்பர பலகைகள் என எவ்விதத்திலும் மது பானங்கள், புகையிலைப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புற்றுநோய், இதய நோய்கள், நீரிழிவு போன்ற பல வகை நோய்களுக்கு மதுபானங்களும் புகையிலை பொருட்களும் ஒரு காரணமாக இருப்பதையும் அவை இந்தியாவில் அதிகரித்து வருவதையும் அரசு தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள நிலையில் அவர்கள் சிறந்த முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆரோக்கியமான பழக்கங்கள் குறித்த விழிப்பணர்வை ஏற்படுத்தும் கடமையும் ஐபிஎல்லுக்கு உள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.