காசாவில் திடீர் தாக்குதல்; 300 பேர் கொன்று குவிப்பு... இஸ்ரேலின் ஆட்டம் தொடங்கியது?

9 hours ago
ARTICLE AD BOX

டெய்ர் அல்-பலா,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அப்போது, எதிரில் தென்பட்ட நபர்களையெல்லாம், அந்த அமைப்பு துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் படுகொலை செய்தது. நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. ஓராண்டுக்கு மேலாக நடந்த மோதலில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது.

முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ஹமாஸ் அமைப்பு விருப்பம் தெரிவித்து வருகிறது. இதன்படி, காசாவில் இருந்து மீதமுள்ள பணய கைதிகள் விடுவிக்கப்படும் சூழல் ஏற்படும். இதனுடன், இஸ்ரேல் படைகள் வாபஸ் பெறப்படுவதுடன், நீண்டகால அமைதிக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அதனடிப்படையில் இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் விருப்பம் தெரிவித்து அதனை வலியுறுத்தி வருகிறது. இது நடைபெறாத சூழலில், காசாவுக்கான நிவாரண பொருட்களை நிறுத்தி உள்ளது. இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இதுபற்றி காசாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 300 பேர் வரை இன்று காலையில் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது. மத்திய காசாவில் அமைந்துள்ள அல்-அக்சா மார்டைர்ஸ் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் கலீல் தெக்ரான் இந்த உயிரிழப்பு தகவலை உறுதி செய்துள்ளார்.

வடக்கு காசா, காசா நகரம் மற்றும் டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ் மற்றும் காசா முனையின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளிலும், ரபா நகரிலும் என பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாலஸ்தீனிய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, உயிரிழந்தவர்களில் பலர் குழந்தைகள் என தெரிவித்தனர்.

இதனால், ஹமாஸ் அமைப்பிடமுள்ள 59 பணய கைதிகளின் நிலை நிச்சயமற்ற சூழலில் உள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் இஸ்ரேல் ஈடுபடுகிறது என ஹமாஸ் அமைப்பு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதல் பற்றி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் கூறும்போது, காசாவில் தாக்குதல் நடப்பதற்கு முன்பு, டிரம்ப் அரசு மற்றும் வெள்ளை மாளிகையை தொடர்பு கொண்டு இஸ்ரேல் அரசு ஆலோசனை மேற்கொண்டது என்றார். ஆனால், தாக்குதலுக்கான ஒப்புதல் அமெரிக்கா தரப்பில் இருந்து அளிக்கப்பட்டது பற்றியோ, இல்லை என்பது பற்றியோ எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்ந்து லெவிட் பேசும்போது, ஜனாதிபதி டிரம்ப் தெளிவுப்படுத்தியது போன்று, இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவையும் பயங்கரவாதத்திற்கு இலக்காக முயலும் ஹமாஸ், ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஈரான் உள்பட அனைவரும் அதற்கான ஒரு விலையை கொடுப்பார்கள். அனைத்து நரகமும் அதற்கான வாசலை தளர்த்தி விடும் என கூறியுள்ளார். இதனால், போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 2-வது கட்டத்திற்கு இஸ்ரேல் முக்கியத்துவம் கொடுக்க போவதில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து தாக்குதல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, கிழக்கு காசா பகுதியில் உள்ள மக்களை வெளியேறும்படியும் இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது. ஒருபுறம் சிறை பிடிக்கப்பட்ட பணய கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி நடந்தபோதும், மறுபுறம் காசாவில் தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ள நிலையில் இந்த தாக்குதல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.


Read Entire Article