ARTICLE AD BOX
காக்கும் கடவுளான மகாவிஷ்ணு தன்னுடைய வாகனமான கருடனுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு கருடனை பார்த்து "இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர்?" என்று கேட்டார். அதற்கு கருடன் "மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் பரமாத்மா" என்றார்.
"இத்தனை கோடி மக்கள் தொகையில் மூன்று விதமான மக்கள் மட்டுமே உள்ளார்களா?" என்று கருடனிடம் கேட்டார் மகாவிஷ்ணு.
அதற்கு கருடன் "பரந்தாமா, உலகில் அனைத்தும் அறிந்தவன் நீ, எதையும் அறியாதவன் போல கேட்பது ஏன்? ஆனாலும் நானறிந்தவரை மூன்று வகையான மக்களே உலகில் உள்ளனர்," என்று கூறினார் கருடன்.
"சரி, அவர்களைப் பற்றி கூறு," என்றார் மகாவிஷ்ணு.
அதற்கு கருடன் "பகவானே! பறவையும் அதன் குஞ்சுகளும் போல முதல் வகை மனிதர்கள் உள்ளனர். பசுவும் அதன் கன்றையும் போல் இரண்டாம் வகையினர் உள்ளனர். கணவனும் மனைவியும் போல் மூன்றாம் வகையினர் உள்ளனர். இதுதான் நான் அறிந்தது," என்றார்.
"எனக்கு எதுவும் புரியவில்லை கருடா! நீயே, விளக்கமாக கூறு," என்றார் மகாவிஷ்ணு.
அதற்கு கருடன்,
"முதலில், 'பறவையும் அதன் குஞ்சுகளும் போல' என்றால் பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்து விட்டு, அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது. அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் அந்த குஞ்சுகளையே உண்டு விடுகின்றன. காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலைப் படுவதில்லை. உயிருடன் இருக்கும் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும். வளரத் தொடங்கிய குஞ்சுகள் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும். சில பறவைகள் மட்டும் பறக்க கற்றுக் கொண்டு வாழும். இதுபோலதான் முதல் வகை மனிதர்கள். கிடைக்கும் வேலையை செய்வார்கள். கிடைத்ததை உண்பார்கள். இல்லை என்றால் பட்டினி கிடப்பார்கள். அவர்களுக்கு தன்னை பற்றியே தெரியாது. வாழ்வார்கள், வாழும் வரை அவ்வளவு தான்.
இரண்டாவது வகை மனிதர்கள் பசுவும் கன்றும் போல. பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும். பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும். கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிறு அதனை தன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது. கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும். அது போல ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும். உன் வழி தெரியும். உன்னால் தான் மனித வாழ்வே நிரந்தர சுகம் பெறும் என்பதும் தெரியும். ஆனாலும் உன்னிடம் வர முடியாமல் பாசம் என்ற கயிற்றில் மாட்டிக்கொண்டு தவிப்பார்கள்.
மூன்றாவது வகை மனிதர்கள் கணவனும் மனைவியும் போல. முன்பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்யும் கணவன், அவளிடம் முகம் கொடுத்து பேசமாட்டான். அவளிடமிருந்து ஒதுங்கி போவான். ஆனால், அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு, தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள். முதலில் ஒதுங்கிய அவன், பின்பு அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான். அவளை பிரிய மறுக்கிறான். அது போல ஒரு சாரார் உன்னை கண்டதில்லை என்றாலும், ஒரு நாள் உன்னை அறியும் போது, உனக்காக மாறி உன்னிடம் ஐக்கியமாகி விடுகின்றனர்,"
என்றார் கருடன்.
பதிலில் மகிழ்ந்த மஹாவிஷ்ணு கருடனை வாழ்த்தினார்.