ARTICLE AD BOX
சென்னை,
சென்னையில் 'வைரமுத்தியம்' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இந்திய படைப்புகளில் நோபல் பரிசுக்கு தகுதியான ஒன்று என 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை நானே முன்மொழிவதைத் தவிர வேறு வழி இல்லை. எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய 'ஓல்ட் மேன் அண்ட் தி சீ'(The old man and the sea) நோபல் பரிசு பெற்ற படைப்பாகும்.
அதை 'கடலும் கிழவனும்' என்று மொழி பெயர்த்தவர்கள், 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை 'நிலமும் கிழவனும்' என்று மொழி பெயர்க்கலாம். 'கடலும் கிழவனும்' என்ற நாவலுக்கு சற்றும் சளைத்தது அல்ல 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவல். ஆனால் தமிழ்நாட்டிற்கு வெளியே அதை உயர்த்திப் பிடிக்கும் அமைப்புகள் இல்லை.
எனக்கு வெளிச்சம் போட ஆளில்லை என்பதால் எனது விரல்களை கொளுத்தி நானே மெழுகுவர்த்தி ஏற்றிக்கொள்கிறேன். என் படைப்புகளில் அரசியல் உண்டு. ஆனால் நான் அரசியலில் இல்லை. அரசியல் என்பது ஈடுபடக்கூடாத ஒன்று என்று நான் ஒருநாளும் எண்ணியதில்லை. ஆனால் என் படைப்பு சுதந்திரத்தை எந்த அரசியலும் அனுமதிக்காது என்பதை அறிந்திருக்கிறேன்."
இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவல் இதுவரை 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.