ARTICLE AD BOX
இன்றைய கல்லூரிப்பெண்கள் மத்தியில் தம்மை அழகுபடுத்திக்கொள்ள ஆர்வம் இருக்கும் அளவுக்கு விழிப்புணர்வு இல்லை எனலாம். தோழிகள் மூலமும், இன்ஸ்டா ரீல்ஸ், முகநூலிலும் பார்த்து தெரியாத பியூட்டி கேர் முறைகளை பின்பற்றி சில மோசமான விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க பளிச் தோற்றம் பெற உதவும் வழிகளை பார்ப்போம்.
சரும பராமரிப்பு
சரும பராமரிப்புக்கு முதலில் செய்ய வேண்டியது. சுத்தப்படுத்துதல், டோனிங், ஈரப்பதம்.
சுத்தப்படுத்துதல் - உங்கள் சரும வகைக்கு ஏற்ற மென்மையான க்ளென்சருடன் மெல்லிய துணியால் இரவில் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை அகற்றி துடையுங்கள்.
டோனிங்
உங்கள் சருமத்தின் அளவை சமநிலைப்படுத்த டோனரை பயன்படுத்தலாம். அதாவது ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம்.
ஈரப்பதம்
சருமத்தை அதிக எண்ணெய் வடியும் தோற்றத்தை மாற்றி ஈரப்பதமாக்கும் மாய்சரசை பயன்படுத்தி சருமத்தின் இளமையை கொண்டுவரும் புத்துணர்வு தரும்தோற்றத்தை ஏற்படுத்தும்.
கூந்தல் பராமரிப்பு
மிதமான ஷாம்பு போட்டு தலை முடியை தவறாமல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை அலசி உச்சந்தலையை சுத்தமாக வைத்துக்கொண்டு, தலைக் குளித்த பிறகு பொருத்தமான கண்டிஷனரை பயன்படுத்தலாம்.
வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சிறிது சூடாக்கி உச்சந்தலையில் மசாஜ் செய்தால் கூந்தலின் வேர்களை வலுப்படுத்த உதவும்.
சூரிய ஒளி பாதுகாப்பு
கடும் வெயில் நாட்களில் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். இதனால் புறஊதா கதிர்கள் தாக்கம் இல்லாமல் பாதுகாக்கும்.
இறந்த செல்களை அகற்ற வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை, பாலுடன், மஞ்சள்தூள் கடலைமாவு கலந்து முகத்தில் தடவி சருமத்தை ஸ்கிரப் செய்து கழுவினால் முகம் பளிச்சிடும்.
உடல் பராமரிப்பு
தினமும் ஒருமுறை உடலுக்கு வியர்வை ஏற்படக்கூடிய பகுதிகளில் லேசான சோப்பு அல்லது பாடி வாஷ் பயன்படுத்தி எப்போதும் பிரஷ்ஷாக இருக்கலாம்.
ஒரு நாளைக்கு இருமுறை பல் தேய்த்து நாக்கில் படியும் அழுக்கை அகற்றி மவுத்வாஷ் பயன்படுத்தினால் உங்கள் சுவாசம் புத்துணர்வுடன் இருக்கும்.
நகங்களை சுத்தமாகவும், வெட்டியும் வைத்திருங்கள். நகங்கள் உடையாமல் தடுக்கவும், அழகாக ஆரோக்கியமாகவும் இருக்க நெயில் பாலிஷ் உபயோகிக்கவும்.
ஒப்பனை செய்தல்
தினசரி கல்லூரி செல்லும் போதும், கல்லூரி நிகழ்ச்சிகளுக்கும் சரும நிறத்திற்கு பொருத்தமான ஃபவுண்டேஷன்,
ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா, ப்ளஷ், நல்ல உதடுச்சாயம் போன்றவை உங்கள் தோற்றத்தை எடுத்துக்காட்டும். படுக்கப்போகும் முன்பு மேக்கப்பை அகற்றவும்.
ஆடை அணி மணிகள்
ஆடைகளைத்தேர்வு செய்யும்போது, காட்டன் குர்திகள், சல்வார் கமீஸ், நல்லனவாக தேர்வு செய்து அணிந்தால் நல்ல லுக் தரும்.
தரமான காலணிகள் ஃபிளாட் அல்லது சாதா பாட்டம் கொண்டவைகளை அணியலாம். காதணிகள் எளிய வளையல் அல்லது கைக்கடிகாரம், மென்மையான சங்கிலி உங்கள் தோற்றத்தை எடுப்பாக காட்டும்.
உணவு முறை
பழங்கள், காய்கறிகள், புரதம், தானியங்கள் நிறைந்த சமச்சீர் உணவைச் சாப்பிடுங்கள். நிறையத் தண்ணீரை குடித்து வந்தால் சருமத்தை ஈரப் பதமாக்கும். யோகா, ஜாகிங், நடனம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும்.
இரவில் செல்போனில் பேசுவதையும், பார்ப்பதையும் குறைத்து சிக்கிரமே தூங்கச்செல்லுங்கள். இதனால் மனஅழுத்தம் நீங்கி அமைதி, சரியான ஓய்வால் புத்துணர்வு பெற்று உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கல்லூரி செல்லும் மாணவிகள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் பளிச்சென்ற தோற்றத்துடன் ஜொலிக்கலாம்.