ARTICLE AD BOX
திருமணம் என்பது ஓர் அழகான நிகழ்வு. ஆனால், அது நடைபெறுவதற்கு முன்பாகவே ஒருசில காரணங்களால் நின்றுபோவதும் உண்டு. அந்த வகையில், கர்நாடகாவில் வரவேற்பு விருந்தில் குடிநீர் வழங்கவில்லை என்பதற்காகவே திருமணமே நின்றுபோன கதை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவங்கேர் மாவட்டம் ஜகளூரைச் சேர்ந்த என்.மனோஜ் குமாருக்கும் தும்கூர் மாவட்டம் ஷிரா தாலுகாவில் உள்ள சிரத்தஹள்ளியை சி.ஏ.அனிதாவுக்கும் திருமணம் செய்ய பேசி முடிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று (மார்ச் 16) நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல்நாள் (மார்ச் 15) இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன், மண மகளின் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது.
அப்போது விருந்து முடியும் தருவாயில் சிலர் வந்துள்ளனர். அவர்கள் சாப்பிட அமர்ந்து உள்ளனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு கேட்டரிங் ஊழியர்கள் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவில் தொடங்கிய இந்த தகராறு மறுநாள் காலை வரை நீடித்தது. எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பினரும் சமாதானம் அடையவில்லை. அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் சமாதானம் அடைவதாக தெரியவில்லை. இறுதியில், அவர்களது திருமணம் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.