ARTICLE AD BOX
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்தபோது, சிறை விதிகளை மீறி சொகுசு வசதிகளை அனுபவிப்பதாக கூறி பரபரப்பு தகவல்களை வெளியிட்டவர் அப்போதைய சிறைத் துறை அதிகாரியான ரூபா. இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த போது நாடு முழுவதும் பேசுபொருளானார், ரூபா. இதைத் தொடர்ந்து காவல்துறையில் பல்வேறு பணிகளுக்கு ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மறுபுறம், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கும் ரூபாவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இருவரும், சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துகொண்டனர். ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களை ரூபா சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் அவர்களை கர்நாடக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, பின்னர் பணி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது கர்நாடக அரசின் ஐ.ஜியாக ரூபா பணிபுரிந்து வருகிறார். அந்த வகையில், காவல்துறை அதிகாரி ரூபா மீது சக பெண் அதிகாரியான துணை ஐ.ஜி வர்த்திகா கட்டியார் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்தாண்டு காவலர்கள் இருவர், தான் இல்லாதபோது தனது அறைக்கு வந்து, பிற துறை சார்ந்த ரகசிய ஆவணங்களை வைத்துவிட்டு, அதனை புகைப்படம் எடுத்து சென்றதாக கூறியுள்ளார். ஐ.ஜி ரூபாவின் அறிவுறுத்தலின்படியே அவர்கள் இவ்வாறு செய்ததாகவும், தனக்கு எதிராக அறிக்கை அளிப்பேன் என ரூபா மிரட்டுவதாகவும், துணை ஐ.ஜி வர்த்திகா கட்டியார் தெரிவித்துள்ளார்.