ARTICLE AD BOX
கயாடு லோஹரை பாத்தாலே பீவர்தான்... வந்துச்சே பீலிங்ஸ்.. கடவுள் தேசத்து தேவதைகளும்!
சென்னை: டிராகன் படம் வெளியான பிறகு எந்த பக்கம் திரும்பினாலும் கயாடு லோஹர் பீவர் இளைஞர்களை தொற்றிக்கொண்டுள்ளது. கயாடு லோஹர் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் என மாறி மாறி பகிரப்படுகின்றன. கயாடு லோஹரின் கால் அழகில் கண்கள் சிக்கி கொண்டது போல நெட்டிசன்கள் பலரும் சிக்கி தவிக்கின்றனர். வட இந்தியாவில் இருந்து வந்த நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டி கும்பிட்டு தமிழ் மருமகளாவும் ஏற்றுக்காெண்டவர்கள் கயாடு லோஹரயும் விட்டுவிடுவார்களா! வந்தாரை வாழவைத்த தமிழ் சினிமா கயாடு லோஹரையும் வாழவைக்கும்.
யார் இந்த கயாடு லோஹர்: அசாம் மாநிலம் திஸ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர். 2000இல் பிறந்த இவர் மும்பையில் படித்து வளர்ந்தார். கடந்த 2021இல் கன்னட திரைப்படமான 'Mugilpete' இல்ல் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் '19ஆம் நூற்றாண்டு', தெலுங்கில் 'அல்லுரி', மராத்தியில் 'I Prem U' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்து விட்டு, கோலிவுட்டிற்குள் நுழைந்துள்ளார். டிராகன் படத்தை தொடர்ந்து, அதர்வா உடன் கயாடு லோஹர் நடித்துள்ள இதயம் முரளி திரைப்படம் வெளிவரவுள்ளது.

பால்கோவா: டிராகன் படம் வெளியான பிறகு, இன்ஸ்டாகிராமை திறந்தாலே நோடிபிகேஷனுக்கு முன்பு காண கிடைப்பது கயாடு லோஹரின் வீடியோக்கள் தான். அவர் பேசுவதும், பாடுவது போன்ற வீடியோக்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க ரெட் வெல்வட், வெண்ணெய், பால்கோவா, வெள்ளி சிலை என வருணித்து வருகின்றனர். தமிழில் நடிக்க வந்த தமன்னா, ராஷி கண்ணா போன்ற பல நடிகைகள் தமிழை கற்றுகொண்டு கொஞ்சும் தமிழில் அழகாக பேசுகின்றனர். அதேபோன்று கயாடு லோஹரும் தமிழை கற்று ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

மலையாள நடிகைகள்: சினிமாவை பொறுத்தவரை தமிழகத்தை சேர்ந்த த்ரிஷா, சமந்தா போன்ற நடிகைகள் தெலுங்கு, பாலிவுட்டிலும் கலக்கி வருகின்றனர். அதேபோன்று பிற மாநிலத்தை சேர்ந்த நடிகைகள் தமிழில் நடித்து பெயரும் புகழையும் அடைந்துள்ளனர். தற்போது கயாடு தமிழகத்தை கலக்கினாலும், அவருக்கு முன்பே கடவுள் தேசத்தின் தேவதைகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்துள்ளனர். நாட்டிய பேரொளி பத்மினி முதல் நயன்தாரா வரை சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்துள்ளனர்.

எம்ஜிஆர், சிவாஜி: நாட்டிய பேரொளி பத்மினி சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. சிவாஜி - பத்மினி நடித்த தில்லானா மோகனம்பாள் திரைப்படம் கல்ட் கிளாசிக் வகைகளை சேர்ந்ததாகும். அதேபோன்று பத்மினியின் உறவினர் சுகுமாரியும் 100க்கு மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார். இவர்களை தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெய்சங்கர் என அன்றைய காலத்து நாயகர்களுடன் போட்டி போட்டு ஜோடியாக நடித்த கே.ஆர்.விஜயாவும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்தான். இவர், கமல், ரஜினி, அஜித், விஜய், பிரசாந்த் போன்ற நடிக்களுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மனதில் குடிகொண்டுள்ளார்.

அம்பிகா - ராதா: 80களில் உச்ச நடிகர்களாக இருந்த ரஜினி, கமல் படங்களில் ஜோடியாக நடித்து உச்சம் தொட்டவர்கள் அம்பிகா- ராதா. மனதை உருக வைக்கும் குடும்ப பாங்கான கதாப்பாத்திரமாக இருந்தாலும், இளமை ததும்பும் கவர்ச்சி பாத்திரமாக இருந்தாலும் சரி இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். படிக்காதவன், காக்கி சட்டை, சகலகலா வல்லவன், விக்ரம் போன்ற படங்களில் அம்பிகா ஒரு பக்கம் சக்கை போடு போடுகிறார். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகம் ஆன ராதா, காதல் ஓவியம், காதல் பரிசு, முதல் மரியாதை என இருவரும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

கல்பனா - ஊர்வசி: கேரளத்தை சேர்ந்த மற்றொரு சகோதரிகளான கல்பனா - ஊர்வசியும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளாக திகழ்கின்றனர். பாக்கியராஜ் காம்பினேஷனில் இருவரும் நடித்து தனக்கான ஒரு இடத்தை பெற்றனர். ஊர்வசி, காமெடி, காதல், கண்ணீர் என நடிப்பில் பரிணாமத்தை உருவாக்கியுள்ளார். ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் படமாக சதிலீலாவதி, சின்னவீடு, முந்தானை முடிச்சு போன்ற படங்கள் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
கனவுக்கன்னி: ரேவதி, ஷோபனா, நவ்யா நாயர், பத்மபிரியா, அபிராமி, பார்வதி, நிமிஷா சஜயன், மஹிமா நம்பியார், மஞ்சிமா மோகன், அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மீன், லிஜோமோள் ஜோஸ், மாளவிகா மோகனன், மஞ்சு வாரியர், நிகிலா விமல், அன்னா பென், சுவாசிகா என வெவ்வேறு காலங்கட்டங்களில், தங்களுடைய அழகாலும் தனித்துவமான நடிப்பாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் தடம் பதித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதேபோன்று தமிழ் திரை ரசிகர்கள் கொண்டாடும் கதாயாநாயகிகளாகவும் உள்ளனர். கயாடு லோஹரும் தான் நடித்த முதல் படத்திலேயே 2கே கிட்ஸ் ரசிகர்களை கவர்ந்ததுடன் வெற்றி முத்திரையை பதித்துள்ளார். அவரை கொண்டாடும் காலம் வெகுதூரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.