ARTICLE AD BOX
2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.
அங்கு, மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடந்துகொண்டிருந்தது. இந்த போட்டியின்போது எதிர் அணியினர் மதர் தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதர் தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டனர்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு நடுவரும் வீராங்கனைகளை தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், இதுகுறித்து புகாரளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக அரசு விளக்கம்
இந்த நிலையில், பஞ்சாப்பில் கபடி போட்டிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், 3 மணி நேரத்துக்குள்ளாக அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டு தமிழகம் வர உள்ளனர். அனைவரும் பத்திரமாக தமிழக திரும்பவும், டெல்லியில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழக மாணவிகளை பத்திரமாக தமிழகம் அழைத்து வர துணை முதலமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.