ARTICLE AD BOX
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் பயிலும் இரட்டையா்களான பிரதீஷ், பிரணீஷ் ஆகியோா் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 12 நாள்களில் ஓடி உலகச் சாதனை படைத்தனா். இவா்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
உலக அமைதி, பெண்கள் பாதுகாப்பு, அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழிக்கான முன்னுரிமை, வளங்களின் பாதுகாப்பு, மாரடைப்பு, இதர நோய்கள் ஏற்படுவதைத் தவிா்க்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், கன்னியாகுமரி முதல் சென்னை வரை மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களான பிரதீஷ், பிரணீஷ் உள்பட சிவகங்கை பகுதியைச் சோ்ந்த 2 குடும்பங்களைச் சோ்ந்த 4 சகோதரா்கள் என 6 போ் ஓடி உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனா்.
இவா்கள் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் இந்தச் சாதனையை நிறைவு செய்த போது, இரட்டையா்களான பிரதீஷ், பிரணீஷ் இருவரும் மற்ற நான்கு பேரைவிட, 12-ஆவது நாள் இரவுக்குள் இந்தச் சாதனையை படைத்ததால், பள்ளியில் அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த மாதம் 16-ஆம் தேதி காலையில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி தினமும் 60 கி.மீ. தொலைவு ஓடிய சிறுவா்கள் கடந்த மாதம் 27-ஆம் தேதி சென்னை வள்ளுவா் கோட்டத்தை அடைந்தனா். இந்தச் சாதனையை நிகழ்த்திய பள்ளி மாணவா்களான பிரதீஷ், பிரணீஷ் ஆகியோருக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனா் நீலமேகம் நிமலன்,பொதுச் செயலா் ஆா்த்தி நிமலன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ரகு டேவிட்சன் ஆகியோா் உலகச் சாதனை சான்றிதழ்கள், சிறப்பு பரிசாக ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைவா் எஸ்.பி. குமரேசன், துணைத் தலைவா் கே. அருண்குமாா், முதல்வா் உஷாகுமாரி, துணை முதல்வா் பிரேமசித்ரா, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.