ARTICLE AD BOX
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் நேற்று உரையாற்றினார். புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லாதது குறித்து கேள்வி எழுப்பினார்.
வைகோ பேச்சின் விவரம்:
“பிரைம் மினிஸ்டர் அல்ல, பிக்னிக் மினிஸ்டர்!”
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள், படுகொலைகள் மற்றும் கொடுமைகள் தொடர்கின்றன. எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதை தவிர வேறு என்ன வேலை இருக்கிறது என்பதுதான். அவர் பிரைம் மினிஸ்டர் அல்ல, பிக்னிக் மினிஸ்டர்!
ஒவ்வொரு நாடாக செல்கிற நேரத்தில், நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்திற்கு ஏன் செல்லவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா?
அண்ணாவின் இயக்கத்தில் இருந்து வந்தவன்
இந்தி திணிப்பை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். மத்திய பாஜக அரசின் கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்போம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை குப்பை தொட்டியில் தூக்கி வீச வேண்டும். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
என்னை பேசக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. நான் அண்ணாவின் இயக்கத்தில் இருந்து வந்தவன். நான் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து உருவானவன்.
“கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்”
“எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!
எப்பக்கம் புகுந்து வந்துவிடும் இந்தி
எத்தனை பட்டாளம் கூட்டிவரும்?
கன்னங் கிழிந்திட நேரும் — வந்த
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்” என பாரதிதாசனின் பாடல் வரிகளை சுட்டிக் காட்டி இந்தி திணிப்பு குறித்து தன்னுடைய கருத்தினை பதிவு செய்தார் வைகோ. தன்னுடைய ஆக்ரோஷ குரலில் அவர் முழங்கினார்.