ARTICLE AD BOX
நீரிலும் நிலத்திலும் வாழும் சீல்கள் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. இவை கடல் நாய்கள் என்று அழைக்கப் படுகின்றன. ஏனென்றால் அவற்றின் விளையாட்டுத் தனமான இயல்பும் மற்றும் நாய்களைப் போன்று தோற்றத்திலும் நடவடிக்கையிலும் இருப்பதால் அவை கடல் நாய்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஜெர்மன் மொழியில் இவற்றை கடலின் வேட்டை நாய்கள் என்று அழைக்கின்றனர்.
சீல்களின் அளவு;
சீல்கள் பல்வேறு அளவுகளில் உள்ளன. மிகச்சிறிய சீல் இனம் கலபகோஸ் ஃபர் சீல். இது ஒரு மீட்டர் நீளமும் 30 லிருந்து 45 கிலோ எடை இருக்கும். மிகப்பெரிய சீல் தெற்கு யானை ஆகும். இது ஐந்து மீட்டருக்கு மேல் நீளமாகவும் 4000 கிலோ வரை எடை உள்ளதாகவும் இருக்கும்.
உடலமைப்பு;
சீல்களுக்கு துடுப்புக் கால்கள் உண்டு. கடல் சிங்கங்கள் மற்றும் வால் ரசுகளும் துடுப்பு கால் கொண்டவை. இவற்றுக்கு காதுகள் இல்லை என்று சொல்லப்பட்டாலும் தோலுக்கு அடியில் காதுகளை மறைத்து வைத்திருக்கின்றன. மிகச்சிறிய திறப்புகளை கேட்பதற்கு பயன்படுத்துகின்றன.
இவற்றின் துடுப்பு கால்கள் நீரிலும் நிலத்திலும் வாழ்வதற்கு தகுந்தவாறு அமைக்கப்பட்டுள்ளன. கடலில் நீந்துவதற்கு ஏற்ற வகையில் வலை பிளிப்பர்களுடன் கூடிய சுழல் வடிவ உடலைக் கொண்டுள்ளன. பெரிய கண்கள், மீசை போன்ற உணர்வு உறுப்புகள் இவற்றுக்கு உண்டு. மங்கலான வெளிச்சம் கொண்ட நீருக்கடியில் இரையைக் கண்டறிவதற்கு இவை மிகவும் உதவியாக இருக்கின்றன.
ஓய்வு;
இவை தண்ணீரிலும் நிலத்திலும் தூங்கும். வெப்பத்தை நாடும் போதும் குட்டிகளை பெற்றெடுக்கும் போதும் நிலத்தில் தேர்ந்தெடுக்கும். பிற நேரங்களில் கடலில் வாழும். இவை கடலில் இரண்டு மணி நேரம் வரை தூங்குகின்றன. நிலத்தில் இருக்கும்போது நிறைய நேரம் தூங்குகின்றன. ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை தூங்கி ஓய்வெடுக்கின்றன.
நீந்தும் திறன்;
சீல்கள் உணவு தேடி ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மைல்கள் இடம்பெறுகின்றன. நீண்ட தூரம் நீந்துவதில் திறமை பெற்றவை. யானை சீில்கள் 20 நிமிடங்கள் வரை தண்ணீரில் மூச்சை பிடித்துக்கொண்டு டைவ் அடிக்கின்றன. சில சீல்கள் 4500 அடி ஆழத்திற்கு டைவ் எடுத்து இரண்டு மணி நேரம் வரை நீருக்கடியில் மூச்சை பிடித்துக் கொண்டு இருக்கும் திறன் பெற்றவை.
சுறா மீன்கள் போன்ற பெரிய விலங்கினங்களிடமிருந்து தம்மை காத்துக்கொள்ள நூற்றுக்கணக்கான மீட்டர் தண்ணீருக்குள் இறங்குகின்றன. ஆழமற்ற நீரில் உடலை மிதக்க விட்டு மூக்கை மட்டும் தண்ணீருக்கு மேலே நீட்டிக்கொண்டு வைத்திருக்கின்றன. மற்ற பகுதிகள் நீரில் மூழ்கி இருக்கும்.
சர்வதேச சீல்கள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன?
ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி சர்வதேச சீல்கள் தினம் கொண்டாடப்படும். இந்நாள் சீல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை பராமரிப்பதில் கடல் பாலூட்டிகள் வகிக்கும் முக்கியப் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சீல்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
அவற்றின் தோல், கொழுப்பு மற்றும் இறைச்சிக்காக மனிதர்கள் அவற்றை வேட்டையாடுகிறார்கள். மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட அழிவு ஆகியவைகளால் சீல்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறைந்து வரும் சீல்களின் எண்ணிக்கை குறித்து கவனத்தை ஈர்ப்பதற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் இந்த நாள் அமெரிக்க காங்கிரசால் 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.