ARTICLE AD BOX
பெண் பார்க்க போகும்பொழுது அந்தப் பெண்ணின் நடையை வைத்து, கால் ஊன்றி நடந்து வரும் விதத்தை வைத்து அதன் குணாதிசயங்களை கண்டுபிடிப்பவர்கள் உண்டு. அன்ன நடைக்கு அதிகமான புகழ் உண்டு. ஒவ்வொரு மிருகங்களின் நடையைபோல் நடப்பவர்கள் எந்த சௌபாக்கியத்தை பெறுவார்கள் என்பதை இப்பதிவில் காண்போம்.
முழங்கால்கள் தசை பெருக்கால் மறைந்து, உயர்ந்து, நன்றாக உருண்டிருந்தால் அத்தகைய பெண்கள் லட்சுமி கடாட்சம் பெற்றவர்களாக விளங்குவார்கள் என்கிறது சாஸ்திரம்.
அன்ன நடை போன்றும், மதம் கொண்ட பெண் யானையின் நடையைப் போன்றும் நடக்கும் பெண்கள் எப்போதும் சுகபோகங்களில் ஆசை உடையவர்களாகவும், ஆரோக்கியமான உடல்நலம், மன நிம்மதியும் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கையும், வாகன யோகமும் ,பந்துக்கள், சினேகிதிகள் ஆகியோரின் புகழ்ச்சியும், பாராட்டுதலும் கிடைக்கும் யோகம் உண்டாகும். ஆதலால் இப்படி அமைப்பை பெற்றவர்கள் பாக்கியம் நிறைந்தவர்கள் என்கிறது லட்சணக் குறிப்பு.
இசைத்துறையில் தேர்ச்சி பெற்று பரிசுகளையும் பெற்று புகழுடன் திகழ்பவர்களின் கால்கள் எப்படி இருக்கும் என்றால், கணுக்கால்கள் வழவழப்பாகவும், ரோமம் மற்றும் முறையான அளவினை உடைய அளவாகவும், சமமாகவும், நரம்புகளும் நாளங்களும் வெளியே தெரியாமலும், சதை புஷ்டியாகவும், குண்டாகவும் இருக்கும். அப்படி இருந்தால் அவர்கள் மிகவும் புத்தி உடையவர்களாக இருப்பார்கள். சதா சுகமும் சகல சம்பத்துக்களும் விருத்தி அடையும் யோகம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
பெண்களின் கால்கள் நீண்டிருந்தால் பூர்ண ஆயுள், சத் சந்தான பாக்கியமும், குடும்ப நலமும், சரீர ஆரோக்கியமும், தேஜஸ் விருத்தியும், சகல சம்பத்துக்களின் விருத்தியும் உண்டாகுமாம்.
பாதங்கள் அகலமாகவும், கால்கள் நீண்டும் இருந்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் விருத்தி அடையும் நல்ல யோகம் உண்டாகும் என்கிறது நடையைப் பற்றிய இலட்சண சாஸ்திரம்.
சிங்கம், பூனை, மயில் ஆகியவை போன்ற அழகான நடை அமைந்திருந்தால் நல்ல வாழ்க்கை அமையும் அறிகுறியாகும்.
சிம்ம நடை உடைய பெண்கள் எதிலும் கம்பீரமாகவும், அதிகாரத்துடனும், நீண்ட நாள் எதையும் ஆழ்ந்து கவனித்த பிறகு எந்த ஒரு விஷயத்திலும் முடிவுக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.
எருது, யானை, கீரி, அன்னம் போன்ற நடையினை உடையவர்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வகை சிறப்புகளையும் அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
யானை நடையுடைய பெண்கள் எந்த விஷயத்திலும் அவசரம், பதற்றம் இன்றி நின்று நிதானித்து செயல்படுவார்கள். தத்துவ குணத்துடனும் கம்பீரத்துடன் வாழ்வதையே பெரிதும் விரும்புவார்கள் என்கிறது நடை அடையாளங்கள்.
முயல், ஒட்டகம், மான், தவளை, கழுதை, ஓணான், குள்ளநரி ஆகியவற்றை போன்ற நடை அமையப் பட்டவர்கள் தனியார் துறையில் பணியாற்றுவார்கள் என்றும், அரசு துறையில் இவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது' எட்டாத பழத்திற்கு கொட்டாய் விடுவது' போன்று அரியது என்றும் கூறப்படுகிறது.
குதிரை போன்ற நடை உடைய பெண்கள் எதிலும் நிமிர்ந்து நின்று சாதிக்கும் குணம் உடையவர்கள். நல்ல ரோசக்காரர்கள். எந்த செயலையும் டக் என்று முடித்து விடுவார்கள். பேசும்போது வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்கும். பிறருக்கு உபகாரம் உதவி செய்யவேண்டும் என்றால் அத்தனை நாள் கடத்தாமல் உடனுக்குடன் செய்பவர்கள் இவர்களே. எந்த காரியத்தையும் உடனுக்குடன் அவ்வப்போது செய்வதை பெரிதும் விரும்புவார்கள் என்கிறது நடை அழகு பற்றிய குறிப்புகள்.
நடையானது அமைதியாகவும், உதறல் இல்லாமல் ஒரே சீராகவும், அடக்க முடையதாகவும் அமைய பெற்றிருப்பின், செல்வ வளமையும், நல்ல சிறப்புகளுடன் கூடிய நல்ல வாழ்க்கையும் அமையும் என்று நடைப்பற்றிய இலட்சணக்குறிப்பு கூறுகிறது.
நடை அழகாக இருக்கவேண்டும் என்றால் பாதங்கள் அழகாக இருக்க வேண்டும். வெடிப்பு எதுவும் இன்றி சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி சுத்தமாக இருக்கும்படி நாம் பராமரிக்க வேண்டும். அப்பொழுதுதான் நிதானமாக நடக்கமுடியும். அப்படி நடக்கும் பொழுது நடைக்கு ஒரு அழகு கூடும் என்பது உறுதி.
இனிமேல் யாராவது நடந்தால் கூட அவர்களின் நடையை ஆராய முனைவீர்கள்தானே!