ARTICLE AD BOX
தமிழ் சினிமா உலகில் காலங்கள் கடந்து சென்றாலும் இன்றும் நல்ல நடிகராக பார்க்கப்படுபவர்கள் ஒரு சிலரே. அப்படி ஒரு சிலரில் நடிகர் சிவகுமாரும் ஒருவர்.
1959 முதல் 1965 வரை சென்னையில் உள்ள அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியின் மாணவராக இருந்த நடிகர் சிவக்குமார், அன்றைய முன்னணி நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த, ஏ. வி. எம். ஸ்டூடியோ தயாரித்து இயக்கிய 'காக்கும் கரங்கள்' படத்தில் நடிகராக அறிமுகமானார்.
சிவகுமார் நடிப்பில் வெளியான ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘திருமால் பெருமை’, ‘உயர்ந்த மனிதன்’, 'அன்னக்கிளி', 'பத்திரகாளி', 'சிந்து பைரவி', 'ரோசா பூ ரவிக்கைக்காரி',' வண்டிச்சக்கரம்', 'ஆட்டுக்கார அலமேலு' போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் அவரின் உணர்ச்சிகரமான நடிப்பு திறமையை நிரூபிக்கும் திரைப்படங்களாக முத்திரை பதித்தன. மேலும் இதில் சில படங்கள் வெள்ளி விழாவையும் கொண்டாடின.
தனது பணியில் மட்டுமே கவனம் செலுத்தும் நடிகர் சிவகுமார், தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு கிசுகிசுக்களிலும், வதந்திகளிலும் சிக்காத நடிகர் என்றே சொல்வார்கள். அந்தளவு ஒழுக்கமானவர் என்று பெயர் எடுத்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனில் தொடங்கி, அஜித், விஜய், விக்ரம், சூர்யா உள்பட மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பழம்பெரும் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார் நடிகர் சிவக்குமார்.
2000-ம் காலகட்டத்தில் ராதிகாவுடன் இணைந்து 'சித்தி' மற்றும் 'அண்ணாமலை' போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சின்னத்திரையில் தனது முத்திரையை பதித்தார் நடிகர் சிவகுமார்.
யோகாவில் அதீத ஈடுபாடு கொண்ட நடிகர் சிவக்குமார், இந்த வயதிலும் யோகா மூலமே தனது உடலை மெயின்டெயின் செய்து வருகிறார். மேலும் தமிழ் திரையுலகில் சிவகுமார் நடிப்பையும் தாண்டி, மேடை பேச்சு, சொற்பொழிவு, ஓவியம் வரைதல் போன்ற பல்துறை வித்தகராகவும் திகழ்கிறார். மேலும் இவர் கம்ப ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் 100 ஆகிய சிறந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பின்னர், அவரது மிகப்பெரிய பேஷனான ஓவியம் வரைவதை தொடர்ந்து வருகிறார். இவரது ஓவியங்கள் பிரபலங்கள் பலராலும் பாராட்டுகளுக்கு உள்ளாகி வருகின்றன. சில பிரபலங்களுக்கு தனது கைப்பட ஒவியங்களை வரைந்தும் கொடுத்துள்ளார். ஒருமுறை நடிகர் சிவகுமார் பேட்டியில், ‘ஒரு திரைப்படம் பலரது கூட்டுழைப்பு. ஆனால் ஓவியம் என்பது எனது உழைப்பில் மட்டுமே உருவாவது. மீண்டும் ஓவியனாகப் பிறக்க வேண்டும் என்பதே என் விருப்பம்' என்று கூறியிருந்தார். இதன் மூலம் ஒவியத்தில் அவருக்கு இருக்கும் காதலை அறிந்து கொள்ளலாம்.
சென்னை செஷனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நடந்து வரும் மாநில அளவிலான தபால்துறை கண்காட்சி வரும் பிப்ரவரி 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், நடிகர் சிவகுமார் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த கண்காட்சியில் 1852-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட தபால் தலைகள், தபால் உறைகள், மணியார்டர், கடிதங்கள், வாழ்த்து அட்டைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும் விழாவில் நடிகர் சிவகுமார் 1960-களில் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு தபால் அட்டைகளாக வெளியிடப்பட்டது. அவரின் ஒவ்வொரு தூரிகைக்கும் ஒரு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு ஓவியங்களில் சிரத்தை இருந்தது.
இந்நிலையில், சிவகுமாரின் இந்த வாட்டர் கலர் ஓவியங்கள் போஸ்ட் கார்டுகளில் பயன்படுத்தப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, தன்னுடைய அப்பா குறித்து மேலும் பெருமிதம் கொள்வதாக தன்னுடைய எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
175-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் என்று புகழ்பெற்று இருந்தாலும் ‘ஓவியன்’ என்று சொல்லிக்கொள்வதையே பெருமையாக கருதுகிறார் நடிகர் சிவக்குமார்.