ARTICLE AD BOX
துபாயில் நடந்து வரும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டு வெளியேறியது. மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறிய பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் முழுமையாக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
முதன்மை கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக நீக்கப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியிடம் தனது அணி தோல்வி அடைந்து வெளியேறுவதற்கு முன்பு வரை ஸ்மித் தனது அணியை அரையிறுதி வரை சிறப்பாக வழிநடத்தினார். இந்தியாவிற்கு எதிரான அரையிறுதியில் அதிகபட்ச ரன் குவித்த வீரராக ஸ்மித் 96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஸ்டீவன் ஸ்மித் கூறுகையில், ‘ஒரு நாள் கிரிக்கெட்டில் இது ஒரு சிறந்த பயணமாக இருந்தது. இதன் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். இதில் பல அருமையான தருணங்களும், அற்புதமான நினைவுகளும் அடங்கும். இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற அணியில் அங்கம் வகித்தது சிறப்பானதாகும். வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் தொடர், உள்ளூரில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் எதிர்பார்க்கிறேன். டெஸ்ட் போட்டியில் என்னால் இன்னும் நிறைய பங்களிக்க முடியும் என்று கருதுகிறேன்’ என்றார்.
35 வயதான ஸ்டீவன் சுமித் 2010-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டராக களம் கண்டார். பின்னர் முன்னணி பேட்ஸ்மேனாக உருவெடுத்த அவர் 170 ஒருநாள் போட்டியில் விளையாடி 12 சதம், 35 அரைசதம் உள்பட 5,800 ரன்கள் எடுத்துள்ளார். 28 விக்கெட்டும் எடுத்துள்ளார். 2015, 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். 2015-ம் ஆண்டு ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவிக்கு வந்த ஸ்டீவன் சுமித் 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டதுடன், கேப்டன் பதவியையும் பறிகொடுத்தார். அவர் 64 ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு டேவிட் வார்னர் ஓய்வு பெற்ற பிறகு ஆஸ்திரேலியா ஏற்கனவே மறுகட்டமைப்புப் பணியில் ஈடுபட்டது. ஆனால் இப்போது ஸ்டீவ் ஸ்மித்தின் இடத்தை நிரப்ப ஒரு திறமையான வீரரைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.