ARTICLE AD BOX
அதிமுகவில் அதிகார போட்டி காரணமாக பிளவு நீடிக்கிறது. ஓபிஎஸ்-ன் இணைப்பு கோரிக்கையை ஈபிஎஸ் நிராகரித்ததால், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திமுக அரசை விமர்சித்து, அதிமுகவின் கொள்கை உறுதிப்பாட்டை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியால் பல குழுவாக அதிமுக தலைவர்கள் பிரிந்து உள்ளனர். இதன் காரணமாக கடந்த 8 வருடங்களாக அதிமுக தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வருகிறது. எனவே பிரிந்து சென்ற தலைவர்கள் ஒன்றினைய வேண்டும் என நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
அதற்கு ஏற்றார் போல முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் எந்தவித நிபந்தனையும் இன்றி கட்சியில் இணைய தயார் என தெரிவித்திருந்தார். ஆனால் ஓபிஎஸ்யின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி உறுதிபட நிராகரித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்றைய இருள் மிகுந்த விடியா திமுக அரசு எப்படியெல்லாம் மக்களை அலைக்கழித்து, அஞ்சி, அஞ்சி வாழச் செய்கிறது என்பது பற்றியும். தமிழ் நாடு முழுவதும் மக்கள் பேசுகிறார்கள். எப்போது தேர்தல் வரும். அம்மாவின் அரசை எப்போது மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைக்கு, விடியா திமுக அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்றக்கூட திறனற்றதாக உள்ளது. மிகப் பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.
ஒநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது. "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம்; மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம்;

இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் இதய தெய்வம் அம்மா சூளுரைத்தார். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது.

வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரிந்து சென்ற தலைவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து விடுவார்கள் என எதிர்பார்த்த அதிமுகதொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அதிர்ச்சி அளித்துள்ளது.