ARTICLE AD BOX
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்யகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் நவீன் குமார் (27) இவரது உறவினரான சுவாதி (20) என்பவருக்கு ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனையில் உள்ள தாயையும் குழந்தையையும் பார்ப்பதற்காக நவீன் குமார் குடிபோதையில் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது மருத்துவமனை ஊழியர்கள் அவரை பார்ப்பதற்கு அனுமதிக்காமல் காலையில் வந்து பார்க்குமாறு கூறியுள்ளனர். அதற்கு நவீன் குமார் உடனடியாக குழந்தை பார்க்க வேண்டும் எனக்கூறி அங்கு பணியில் இருந்த மருத்துவரையும் மருத்துவ பணியாளர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனை தட்டி கேட்ட மருத்துவர் ராம் பிரபாகர் என்பவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நவீன் குமார் வெளியே சென்று அவரது நண்பர்கள் சிலரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் அக்ஷயா ராம் என்பவரையும் அவர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காயமடைந்த மருத்துவர்கள் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து ஓசூர் பேகேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (27), அவரது நண்பர்களான அம்ரேஷ் (26) மற்றும் விக்னேஷ் (28) ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.