ARTICLE AD BOX
ஓசூர் ஏர்போர்ட்-ன் அடுத்த முக்கிய அப்டேட் வந்தாச்சு..!! ஸ்டாலின் அரசின் முக்கிய முடிவு..!!
தமிழ்நாட்டின் எம்எஸ்எம்ஈ நிறுவனங்களின் களஞ்சியமாகப் பார்க்கப்படும் ஓசூர், மாநிலத்தின் உற்பத்தித் துறைக்கு முதுகெலும்பாக இருக்கும் இதேவேளையில், இந்நகரத்தைப் பெங்களூர்-க்கு இணையாக ஒரு ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நகரமாக மாற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த முக்கியமான கட்டத்தில் தான் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் ஓசூரின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்து, அடுத்தடுத்து பணிகள் நடைபெற்று வரும் வேளையில், தற்போது முக்கிய கட்டத்திற்கு இத்திட்டம் முன்னேறி வருகிறது.

தமிழ்நாடு அரசு ஏப்ரல் மாதத்திற்குள் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இறுதி இடத்தை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தற்போது நடத்தி வரும் விரிவான மதிப்பீட்டைப் பொறுத்து இருக்கும் என தெரிகிறது.
AAI தற்போது விமான நிலையம் அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இடங்களில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஓசூர் அருகே பெலகொண்டபள்ளியில் உள்ள தனேஜா ஏவியேஷன் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (TAAL) நிறுவனத்திற்குச் சொந்தமான தனியார் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இடங்களும் இதில் அடங்கும்.
ஓசூர் விமான நிலையத்திற்காகத் தமிழ்நாட்டு மக்களைக் காட்டிலும் பெங்களூர் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர், அதிலும் குறிப்பாக தெற்கு பெங்களூரில் இருக்கும் மக்களுக்கு விமான நிலையம் அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் பெங்களூர் எல்லைக்கு அருகில் இருக்கும் காரணத்தாலும், மெட்ரோ சேவை பெங்களூரில் இருந்து ஓசூர் வரையில் நீட்டிக்கப்படப் பேச்சுவார்த்தை நடக்கும் காரணத்தாலும் இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
AAI அமைப்பு இந்த இடம் குறித்த ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்நாடு அரசு ஓசூர் விமான நிலையத்தை அமைக்க போதுமான இடம், விரிவாக்கத்திற்கான இடம், குறைந்தபட்ச இடையூறு, நிதி தேவை போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பொருத்தமான இடத்தை இறுதி தேர்வு செய்யும்.
இதேபோல் ஓசூர் விமான நிலையத்தை அமைக்கும் இடத்தில் குறைந்த மக்கள் தொகை, குறைந்தபட்ச சுற்றுச்சூழல் இடையூறுகள், குறிப்பிடத்தக்க நீர்நிலைகள் இல்லாமை மற்றும் அரசுக்குச் சொந்தமான நிலத்தின் அளவு போன்ற காரணிகளையும் தமிழ்நாட்டு கவனித்து முடிவு செய்யும்.
தற்போது AAI ஆய்வு செய்து வரும் இரண்டு இடங்கள், தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த ஐந்து இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. ஏப்ரல் மாதத்திற்குள் விமான நிலையத்தின் இடத்தை இறுதி செய்வதில் ஸ்டாலின் தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.
பெங்களூர் 2வது விமான நிலையம்: இதேவேளையில் கர்நாடக அரசு பெங்களூரின் விமானச் சேவை விரிவாக்கம் செய்யும் முயற்சியில், நகருக்கு மத்தியில் இருக்கும் HAL விமான நிலையத்தைத் தாண்டி 2வது பயணிகள் விமான நிலையத்தை வடக்கு பகுதியில் அமைக்கத் தயாராகி வருகிறது. இதற்காக நிலத்தைத் தேடுவதற்குக் கர்நாடக அரசும் முயற்சி செய்து வருகிறது.