ARTICLE AD BOX
நம் நாட்டில் பலதார திருமணம் தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு ஆண் குறைந்தது இரு பெண்களை திருமணம் செய்து கொள்ளும் வினோத பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.
பல்வேறு கலாச்சார சங்கமமாக இருக்கும் இந்தியாவில் ஒரு பகுதியில் இயல்பாக கடைபிடிக்கப்படும் பழக்கம் நாட்டின் மற்றொரு பகுதியில் வினோதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மரில் 600 குடும்பங்கள் வசிக்கும் ராம்தேயோ-கி-பஸ்தி கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் இரு திருமணங்களைச் செய்து கொள்வார்களாம். பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் இப்பழக்கம் தலைமுறை தலைமுறையாக வேரூன்றி இருப்பதாக அந்த கிராம மக்கள் குறிப்பிடுகிறார்கள் .
முதல் மனைவியால் எப்பொழுதும் ஆண் குழந்தையை பெற்றெடுக்க முடியாது என்பது இந்த கிராம மக்களின் அசையாத நம்பிக்கையாக இருப்பதால் ஆண் குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்வதாக காரணம் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.
இரண்டாவது திருமணத்தில் சிலருக்கு ஆண் குழந்தை பிறந்தாலும் பெண் குழந்தைகளும் பலருக்குப் பிறக்கிறது. இதனால் அங்குப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாம். இப்போது அங்கு ஆண்கள் குறைவாகவும் பெண்கள் மிக அதிகமாகவும் உள்ளனர். இதுவும் கூட ஆண்கள் இரு திருமணங்களைச் செய்யக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இந்த நடைமுறை பல காலமாக பின்பற்றப்பட்டு வந்தாலும் தற்போதைய இளைய தலைமுறை இதுகுறித்து கேள்வி எழுப்புகின்றனர். முதல் மனைவியால் ஆண் குழந்தைகளை பெற்றெடுக்க முடியாது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லாத சூழ்நிலையில் இதை ஏற்க முடியாது என்பதால் இது விவாதமாக மாறி உள்ளது. ஆனாலும் இப்பகுதி மக்கள் தங்களுடைய பாரம்பரிய பழக்கத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
கல்வி மட்டுமே மூடநம்பிக்கைகளை அழிக்க வல்லது.