ARTICLE AD BOX
மகாராஷ்டிர மாநிலத்தில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பற்றிய பேச்சுகள் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. சமீபத்தில், ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசியதற்காக மகாராஷ்டிரா சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்தும் இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாகவும், அதில் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கல்லறையை அகற்ற வலியுறுத்தியும், அகற்றாவிட்டால் கரசேவை மூலம் அகற்றுவோம் என தெரிவித்து மாநில அரசிடம் மனு அளித்துள்ள பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், பாபர் மசூதிக்கு ஏற்பட்ட நிலைமை ஔரங்கசீப் கல்லறைக்கும் ஏற்படும் என இந்த அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்துத்துவா அமைப்பினரின் இத்தகைய கருத்துக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், அவர்களுடைய கருத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் உள்ள ஔரங்கசீப் கல்லறையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, அதைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவல்துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மறுபுறம், ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பதற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ”முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் கொடூரமானவர்தான்; மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனை படுகொலை செய்தவர்தான். ஆனால் மராத்தியர்களின் பேரரசை ஒளரங்கசீப்பால் கைப்பற்ற முடியாமல் போனது. ஒளரங்கசீப்பின் கல்லறை நூற்றாண்டுகளாக இருக்கிறது; அவருடைய தவறான நடவடிக்கைகளை நினைவூட்டக் கூடியதாகவும் இந்த கல்லறையைப் பார்க்கலாம். ஒளரங்கசீப்பை புகழ்ந்து பேசுவது எல்லாம் தேவையற்றது. அதை அகற்றுவது எந்த நோக்கத்திற்கும் உதவாது. இப்பிரச்னையை மீண்டும் கிளப்ப வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக நாக்பூரில் நேற்று வன்முறை வெடித்தது. மத்திய நாக்பூரின் மஹாலில் இரு குழுக்களிடையே மோதல் வெடித்தது. விஸ்வ இந்து பரிஷத், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி ஒரு போராட்டத்தை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த வன்முறை நடைபெற்றது. பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து, போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதை அடுத்து வன்முறை தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது அமைதி நிலவுகிறது.
இதையடுத்து முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அமைதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர், "மஹால் பகுதியில் கல்வீச்சு மற்றும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து காவல்துறை நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளது. நாக்பூர் ஒரு அமைதியான நகரம், அங்கு மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள், இது எப்போதும் நாக்பூரின் பாரம்பரியமாகும். எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சரும் நாக்பூர் எம்பியும் நிதின் கட்கரி, “தவறு செய்தவர்கள் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நான் உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். இந்த நிலைமை குறித்து முதலமைச்சருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் விஜய் வடெட்டிவார், ”இரு சமூகங்களுக்கிடையில் வெறுப்பைப் பரப்பவும் மோதலைத் தூண்டவும் வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, இது ஆளும் வர்க்கத்தால் செய்யப்படுகிறது. நாக்பூர் மிகவும் அமைதியான நகரம், ஆனால் அது ஆளும் கட்சி ஆதரவு அமைப்புகளால் தாக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அபத்தமான அறிக்கைகளை வெளியிட்டதால்தான் இது நடந்தது. முதலமைச்சர் உடனடியாக இந்த அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.