ARTICLE AD BOX
ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள்

பட மூலாதாரம், EEP
- எழுதியவர், எமிலி மெக்கார்வி
- பதவி, பிபிசி செய்தி
- 3 நிமிடங்களுக்கு முன்னர்
டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஒரு மாத காலம் ஆகியுள்ளது.
இந்நிலையில், பெடரல் அரசாங்கத்தை மாற்றியமைத்தல், செலவுத் திட்டங்கள் அல்லது பணியாளர்களைக் குறைத்தல், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை புதுப்பித்தல் ஆகிய தனது திட்டங்களை தொடரும் வகையில், அதிபராகப் பதவியேற்ற ஐந்தாவது வாரத்தில், தாக்கத்தை ஏற்படுத்தும் நகர்வுகளை முன்னெடுத்துள்ளார் டிரம்ப்.
யுக்ரேன் அதிபரை "சர்வாதிகாரி" என்று குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்.
கூடுதலாக, செயற்கைக் கருத்தரிப்பு (IVF) சிகிச்சையை மிகவும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யவும் அவர் உறுதியளித்துள்ளார். உயர் பதவி வகித்த ராணுவ அதிகாரியையும் பதவி நீக்கம் செய்துள்ளார்.
இந்த வாரம் டிரம்ப் நிர்வாகம் முன்னெடுத்துள்ள 19 முக்கிய நடவடிக்கைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
1. யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கியை 'சர்வாதிகாரி' என்று அழைத்த டிரம்ப்
செவ்வாய்க்கிழமையன்று, இருவருக்கும் இடையிலான கடுமையான வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக, யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை "சர்வாதிகாரி" (dictator) என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் படையெடுப்புக்கு யுக்ரேனே காரணம் என்ற பொருள்படும் வகையில் டிரம்ப் கருத்து தெரிவித்ததாகவும் இச்சம்பவம் பார்க்கப்படுகின்றது .
யுக்ரேனைத் தவிர்த்துவிட்டு போர் குறித்து நடைபெற்ற அமெரிக்கா - ரஷ்யா பேச்சுவார்த்தை குறித்த ஜெலன்ஸ்கி கருத்துக்குப் பிறகு அதிபர் டிரம்ப், ஜெலன்ஸ்கியை விமர்சித்துள்ளார்.
யுக்ரேன் மக்களிடையே ஜெலன்ஸ்கிக்கு (approval rating) வெறும் 4 சதவீதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து, "உண்மைக்குப் புறம்பான தகவல்களை" நம்பி டிரம்ப் செயல்படுகிறார் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது ரஷ்யா பரப்பும் தவறான தகவல் என்றும் ஜெலன்ஸ்கி வாதிட்டார்.
ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் மே 2024 இல் முடிவடைய இருந்தது, ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முழு அளவிலான படையெடுப்பை ரஷ்யா தொடங்கியதிலிருந்து யுக்ரேன் ராணுவச் சட்டத்தின் கீழ் இருப்பதால், அங்கே தேர்தல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
"சர்வாதிகாரி" என்று ஜெலன்ஸ்கியை விமர்சித்த டிரம்பின் கருத்துக்கு ஜெர்மன் சான்சிலர் உட்பட பல்வேறு ஐரோப்பிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2. யுக்ரேன் இல்லாமல் அமைதி பேச்சுவார்த்தை
உயர்மட்ட அளவில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள், கடந்த செய்வாயன்று நேருக்கு நேர் சந்தித்தனர்.
போர் தொடங்கியதற்குப் பிறகு முதல் முறையாக நடைபெறும் இப்பேச்சுவார்த்தைக்கு யுக்ரேன் அழைக்கப்படவில்லை.
சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளைச் சந்தித்தனர். இதனையடுத்து, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யுக்ரேன் ஓரங்கட்டப்படுவதாக யுக்ரேனில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை அமைதி ஒப்பந்தத்திற்கான முதல் கட்டமாகும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார். மேலும், யுக்ரேன் மீது எந்த கட்டாய நடவடிக்கைகளும் திணிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
3. ரஷ்யாவுடன் கைதிகள் பரிமாற்றம்
இந்த மாதம் மாஸ்கோ விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த நபரை ரஷ்ய அதிகாரிகள் விடுவித்தனர்.
யுக்ரேன் போர் தொடர்பாக அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு 28 வயதான கலோப் பையர்ஸ் விடுவிக்கப்பட்டார்.
கடந்த வாரம் அமெரிக்கப் பள்ளி ஆசிரியர் மார்க் ஃபோகலை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, 2017-ல் பிடிக்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் வின்நிக் என்பவரை விடுவிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்தது.
பிட்காயினைப் (க்ரிப்டோகரன்சி) பயன்படுத்தி பல பில்லியன் டாலர் பணமோசடியில் ஈடுபட்டதாக அலெக்சாண்டர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
4. நியூயார்க்கில் வாகன நெரிசல் கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை
டிரம்ப் நிர்வாகம், நியூயார்க் நகரத்தின் வாகன நெரிசல் கட்டண திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் நுழையும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். சுங்கச்சாவடிகளிலிருந்து கிடைக்கும் வருவாய், பழைய போக்குவரத்து அமைப்புகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
இந்த திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது.
"நெரிசல் கட்டணத் திட்டம் முடிவுக்கு வந்துவிட்டது," என்றும் "மன்ஹாட்டனும், முழு நியூயார்க் நகரமும் மீட்கப்பட்டது. அரசர் வாழ்க!" என்றும் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்த நியூயார்க் ஆளுநர் காதி ஹோசுல், "நாம் சட்டத்தைப் பின்பற்றும் நாடு. அரசனால் ஆளப்படும் நாடல்ல. நாங்கள் நீதிமன்றத்தில் உங்களைச் சந்திப்போம்!" என்று கூறினார்.
5. ஆண்ட்ரூ டேட் வழக்கில் தலையிடக்கூடாது என பாதிக்கப்பட்டவர்கள் டிரம்பிடம் வேண்டுகோள் வைத்தனர்.
சமூக ஊடகப் பிரபலமான ஆண்ட்ரூ டேட் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக நான்கு பெண்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் டேட் மீது விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அமெரிக்க அதிகாரிகள் ருமேனியாவிடம் கேட்டுக்கொண்டதாக தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் குறித்து "மிகுந்த கவலை" கொண்டுள்ளதாக அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.
டேட் சகோதரர்கள் இருவரும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் இந்த வழக்கை ருமேனிய அரசின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக, தி பைனான்சியல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
அதன் பிறகு, வார இறுதியில் டிரம்பின் தூதர் ரிச்சர்ட் கிரெனெல் இதைப் பற்றிய விவாதத்தை முன்னெடுத்தார்.
6. சட்டவிரோத புலம்பெயர்வு குறைந்தது
ஜனவரி மாதத்தில், அமெரிக்கா - மெக்சிகோ எல்லையை சட்டவிரோதமாக கடக்கும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அமெரிக்க எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது.
காவல்படை தரவுகளின்படி, ஜனவரியில் 29,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது 2020-ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகான குறைந்த எண்ணிக்கையாகும்.
டிசம்பரில் 47,000 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஜனவரியில் இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
ஜோ பைடனுக்கு அடுத்து, ஜனவரி 20-ஆம் தேதியன்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்.
டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவிற்குள் ஆவணமற்ற குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. இதில் தெற்கு எல்லையில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் மற்றும் விரைவான வெளியேற்றங்களை அனுமதிக்கும் விரிவாக்கப்பட்ட செயல்முறைகள் ஆகியவையும் அடங்கும்.
7. ஆயிரக்கணக்கான பெடரல் தொழிலாளர்களை பணிநீக்கம்
டிரம்ப் நிர்வாகம் மற்றும் அவரது அரசுத் திறன் மேம்பாட்டு துறையின் (Doge) தலைவர் ஈலோன் மஸ்க், செலவைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்க அரசுப் பணியாளர்கள் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
6,000க்கும் அதிகமான அமெரிக்க வருமான வரித் துறை (IRS) பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் முதல் 5,400 சோதனைக் கால பணியாளர்களை "விடுவிக்க" திட்டமிடப்பட்டுள்ளது என வெள்ளிக்கிழமையன்று பென்டகன் (அமெரிக்க பாதுகாப்பு துறை) அறிவித்துள்ளது.
சிபிஎஸ் செய்திகளின்படி, கடந்த வாரம் மட்டும் அமெரிக்க தேசிய பூங்கா சேவையில் (US National Park Service) பணியாற்றிய சுமார் 1,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது மொத்த பணியாளர்களில் சுமார் 5 சதவீதம் எனக் கணிக்கப்படுகிறது.
அமெரிக்க பாதுகாப்பு துறை, பெடரல் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (FAA) நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டேவிட் ஸ்பெரோ, இந்த வேலைநீக்கத்தை "வெட்கக்கேடானது" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செலவுகளை குறைப்பதை மக்கள் ஆதரிக்கிறார்கள், ஆனால் ஈலோன் மஸ்க் மேற்கொண்டு வரும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் தேவைக்கு மீறி செல்லக்கூடும் எனவும் அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
8. பணிநீக்கிய பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த முயற்சி
கடந்த வார இறுதியில் பணிநீக்கம் செய்யப்பட்ட USDA (அமெரிக்க வேளாண்மைத் துறை) அதிகாரிகளை மீண்டும் வேலைக்கு அழைக்க, டிரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருகிறது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய பறவை காய்ச்சல் பரவல், கோழி மற்றும் மாட்டுப் பண்ணைகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் விளைவாக, முட்டையின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.
பறவை காய்ச்சல் தொடர்பாக பணியாற்றிய "பல" அதிகாரிகளுக்கு கடந்த வார இறுதியில் "வேலைநீக்க அறிவிப்பு வழங்கப்பட்டது".
ஆனால், இந்த நிலையை விரைவாக சரிசெய்ய முயற்சி செய்து, அந்த பணி நீக்கக் கடிதங்களை திரும்பப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம்" என USDA (அமெரிக்க வேளாண்மைத் துறை) செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறையல்ல.
கடந்த வாரம், தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் (National Nuclear Security Administration - NNSA) அதிகாரிகளை பணிநீக்கம் செய்த பிறகு, அரசாங்கம் சிலரை மீண்டும் பணியில் அமர்த்த முயற்சிப்பதாகவும், ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள சிரமப்படுவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
9. ஐ.வி.எஃப் சிகிச்சை மலிவு விலையில் கிடைக்கச் செய்ய நடவடிக்கை
செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சைகளை மிகவும் மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்கான வழிகளை ஆராயும் ஒரு நிர்வாக ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
செயற்கைக் கருத்தரிப்பு பயன்பாட்டை பாதுகாக்கவும், "விரைவாக", அதாவது 90 நாட்களுக்குள் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்கும் உள்நாட்டுக் கொள்கை குழுவுக்கு (Domestic Policy Council) அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை பணியாளர்களின் செயலாளர் வில் ஷார்ஃப் தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, தான் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பினால், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை செலவுகளை காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது அரசே நிர்வகிக்க நடவடிக்கை எடுப்பேன் என டிரம்ப் கூறியிருந்தார்.
10. 'மெக்ஸிகோ வளைகுடா' பெயர் மாற்ற விவகாரம்
அமெரிக்காவில் கூகுள் மேப்ஸ் செயலியில் 'கல்ஃப் ஆஃப் மெக்சிகோ' எனும் பெயர் 'கல்ஃப் ஆஃப் அமெரிக்கா' என மாற்றப்பட்டதை தொடர்ந்து, வெள்ளை மாளிகை மற்றும் செய்தி நிறுவனமான அஸோசியேட்டட் பிரெஸ்ஸுக்கு (AP) இடையே மோதல் ஏற்பட்டது.
அமெரிக்க அரசு ஆவணங்களில் அந்த வளைகுடாவின் பெயரை மாற்ற டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பல அமெரிக்க ஊடகங்களும் பயன்படுத்தக் கூடிய, மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை கைவிடப் போவதில்லை என்று அஸோசியேட்டட் பிரெஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
மறுபுறம், மெக்சிகோ வளைகுடா என்று குறிப்பிடுவதை நிறுத்தும் வரை அதிபர் அலுவலகம் மற்றும் ஏர்ஃபோர்ஸ் ஒன் ஆகியவற்றில் செய்தி சேகரிக்க அசோசியேட்டட் பிரெஸ்ஸுக்கு தடை விதிக்கப்படுவதாக செவ்வாயன்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் டிரம்ப் நிர்வாகத்தின் 3 அதிகாரிகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமையன்று வழக்குத் தாக்கல் செய்துள்ளது. டிரம்பின் நகர்வுகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்க வலியுறுத்தி அவசர விசாரணைக்கு அச்செய்தி நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது .
11. மேயர் ஆடம்ஸ் வழக்கை தள்ளுபடி செய்ய அழுத்தம்
நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸுக்கு எதிரான குற்றவியல் வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் முடிவை அமெரிக்க சட்டத்துறை வழக்கறிஞர்கள் புதன்கிழமையன்று ஆதரித்தனர்.
கடந்த வாரம், ஆடம்சுக்கு எதிரான மோசடி மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய, அமெரிக்க சட்டத்துறை அமைச்சகம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க தலைமை வழக்கறிஞர் உட்பட 7 வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளின் பேரில், கடந்த ஆண்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் ஆடம்ஸ். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுக்கிறார்.
ஆடம்ஸ் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படும் விவகாரத்தில் தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என டிரம்ப் மறுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை, ஆடம்ஸின் வழக்கை இடைநிறுத்தி, குற்றச்சாட்டுகளை ரத்து செய்வதை எதிர்த்து வாதங்களை முன்வைக்க ஒரு சட்டவல்லுநரை ஆலோசகராக நியமிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டார்.
12. ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கான சலுகைகளை குறைக்க நடவடிக்கை
புதன்கிழமையன்று, ஆவணங்கள் இல்லாத குடியேறிகளுக்கான பெடரல் நலன்களை முடிவுக்குக் கொண்டு வரும் நிர்வாக ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
மாநிலங்களுக்கும் உள்ளூர் நிர்வாகங்களுக்கும் வழங்கப்படும் எந்தவொரு பெடரல் நிதியும் " சட்டவிரோதக் கொள்கைகளை ஆதரிக்கவோ அல்லது குடியேற்றத்துக்கு உதவவோ" பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாமல் அமெரிக்காவுக்கு வரும் குழந்தைகளுக்கு குடியேற்ற நீதிமன்ற முறைப்படி வழிகாட்ட உதவிய சேவையை டிரம்ப் நிர்வாகம் செவ்வாய்க்கிழமையன்று நிறுத்தியுள்ளது.
13. செலவுக் குறைப்பால் கிடைத்த பணத்தை மக்களுக்கு திருப்பி அளிக்க யோசனை
ஈலோன் மஸ்க் தலைமையிலான அரசாங்கத் திறன் மேம்பாட்டுத் துறையால் (DOGE) உருவாக்கப்பட்ட சேமிப்பின் ஒரு பகுதி அமெரிக்க வரி செலுத்துவோருக்கு, நிதி செலுத்தும் வடிவத்தில் திருப்பித் தரப்படுவது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்க குடிமக்களுக்கு 20 சதவீதத்தைத் திருப்பிக் கொடுக்கவும், 20 சதவீதத்தின் மூலம் கடனை அடைக்கவும் யோசித்து வருகிறோம்," என்று இந்த வாரம் ஃபுளோரிடாவில் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்த கூடுதல் விவரங்களை அவர் வழங்கவில்லை.
டிரம்ப் இவ்வாறான கருத்துகளை கூறுவதற்கு முன்பு, "அரசாங்கத் திறன் மேம்பாட்டுத் துறை லாபத்தில் பங்கு" (DOGE Dividend) வழங்க வேண்டும் என்று ஒரு பயனர் பரிந்துரை செய்ததை தொடர்ந்து, மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் "நான் அதிபருடன் கலந்தாலோசிக்கிறேன்" என்று பதிவிட்டார்.
14. மியூனிச் மாநாட்டில் ஐரோப்பாவை விமர்சித்த வான்ஸ்
ஒரு வாரத்திற்கு முன்பு முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போது, அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் , ஐரோப்பிய நாடுகளில் நிலவும் ஜனநாயகத்தை கடுமையாக விமர்சித்தார். கண்டத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ரஷ்யாவிலிருந்து அல்லது சீனாவிலிருந்து வரவில்லை, மாறாக "உள்ளிருந்தே" வருவதாக அவர் கூறினார்.
யுக்ரேனில் போரை முடிக்க பேச்சுவார்தையைத் தொடங்குவது குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய அரசுகள் மீது குற்றம்சாட்டினார் வான்ஸ். அவர்கள் தங்கள் விழுமியங்களை விட்டு விலகியதாகவும், நாட்டு மக்கள் மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்த கவலைகளை புறக்கணித்ததாகவும் குற்றம் சாட்டினார்.
வான்ஸின் உரைக்கு ஐரோப்பாவின் பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
15. G20 மாநாட்டை புறக்கணித்தார் ரூபியோ
இந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற G20 வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ரூபியோ மறுப்பு விட்டார்.
பன்னாட்டு ஒத்துழைப்பும் சர்வதேச சட்டத்தைப் பின்பற்றுவதும் உலகளாவியப் பிரச்னைகளை தீர்க்க முக்கியமானவை என்று தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
16. பட்ஜெட்டை குறைக்கும் வழிகளைக் கண்டறிய பென்டகனுக்கு அறிவுறுத்தல்
வரும் ஆண்டில் 50 பில்லியன் டாலர் செலவை குறைக்கும் வழிகளை கண்டறியுமாறு பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் அமெரிக்க ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு துணைச்செயலர் புதன்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், "அதிகப்படியான அதிகாரத்துவம்" மற்றும் 'காலநிலை மாற்றம்' என்ற பெயரில் முந்தைய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் மூலம் எங்கள் ராணுவத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்திய தேவையற்ற செலவுகள் நிறுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
17. 9/11 தொடர்பான புற்றுநோய் ஆராய்ச்சி மீண்டும் தொடர்கிறது
9/11 (2001 ம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி) நடைபெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடைய புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிக்கு நிதியுதவியைத் தொடர நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (The Centers for Disease Control and Prevention- CDC) முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் அரசாங்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை (DOGE) இதற்கான நிதியுதவியை நிறுத்த முயற்சித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
257,000 டாலர் (199,000 யூரோ) மதிப்புடைய இந்த ஒப்பந்தம், உலக வர்த்தக மையத் தாக்குதலின் போது நச்சுப் பொருட்களால் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களின் புற்றுநோய் விகிதங்களை, அவற்றால் பாதிக்கப்படாதவர்களுடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளப் பயன்படுத்தப்படுகிறது.
"9/11 புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நியூயார்க் தீயணைப்பு துறைக்கு நிதி வழங்குதல் ஒருபோதும் குறைக்கப்படக் கூடாது" என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க செனட் உறுப்பினர் சக்ஸ் சுமர் கூறினார்.
18. நாஸ்கர் சீரிஸ் தொடக்க விழாவில் டிரம்ப்
நாஸ்கர் சீரிஸ் தொடக்க விழாவில் டெடோனா பந்தய டிராக்கில் டிரம்பின் வாகன அணிவகுப்பு சுற்றி வந்தது.
ஏர்ஃபோர்ஸ் விமானத்தில் வந்திறங்கிய டிரம்ப், பந்தயக் கார் ஓட்டுநர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
19. ராணுவ ஜெனரல் பதவி நீக்கம்
அமெரிக்காவின் ராணுவ கூட்டுப் படைகளின் தலைவர் சீ.கியூ ப்ரவுன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அவர் நாட்டின் உயர் ராணுவ அதிகாரியாகவும், அதிபருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெனரல் ப்ரவுன் பதவியை விட்டு விலகுவதை வெள்ளிக்கிழமை மாலை டிரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்தார்.
அமெரிக்க வரலாற்றில் இந்த பதவியை வகித்த இரண்டாவது கருப்பின அதிகாரியாக அவர் இருந்தார். அவருடன் மேலும் ஐந்து உயர் அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும் டிரம்ப் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)