ARTICLE AD BOX
சென்னை,
நாட்டின் நிதி தொடர்பான பல முடிவுகளை எடுக்கும் பெரிய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னரை தலைவராகக்கொண்ட 6 பேர் கொண்ட நிதிக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி நாட்டில் நிலவும் விலைவாசி, பொருளாதார வளர்ச்சி நிலையை கருத்தில்கொண்டு பல முடிவுகளை எடுத்து, அறிவிப்புகளை வெளியிடுவார்கள். இதில் முக்கியமான ஒன்று என்றால் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம்தான். இதுதான் 'ரெப்போ ரேட்' என்று அழைக்கப்படுகிறது.
இதுபோல மற்ற வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு கொடுக்கும் பணத்துக்கான வட்டி 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்' என்று அழைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்தி காந்த தாசின் பதவிக்காலம் முடிந்த பிறகு மத்திய அரசாங்கத்தில் நிதி சேவைத்துறை செயலாளராக பணியாற்றிய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற பிறகு முதல் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகளில் 6 உறுப்பினர்களும் ஏகமனதாக 'ரெப்போ ரேட்' விகிதத்தை 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைத்தது முக்கிய முடிவாக கருதப்படுகிறது.
இவ்வாறு 'ரெப்போ ரேட்' குறைப்பது 5 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கேறியிருக்கிறது. கடைசியாக 2020-ம் ஆண்டு மே மாதம்தான் 'ரெப்போ ரேட்' வட்டி விகிதம் 6.25 சதவீதமாக இருந்தது, பின்பு 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு, அதன்பிறகு நடந்த 11 கூட்டங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே 6.5 சதவீதமாகவே நீடித்து வந்தது. பொதுவாக 'ரெப்போ ரேட்' குறைந்தால் வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், சிறு குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு வழங்கும் கடன் ஆகியவற்றுக்கான வட்டி குறைக்கப்படும். இதனால் பொதுமக்கள் இந்த கடன்களை வாங்கி அதனை மாதாந்திர தவணையில் திருப்பி செலுத்தும் தொகையும் குறையும்.
இது கடன் வாங்கியவர்களுக்கு லாபமாக இருக்கும். ஆனால் 11 கூட்டங்களில் அதாவது 22 மாதங்களில் இந்த வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் கடன்களை திருப்பி செலுத்தும் தொகையிலும் மாற்றம் இல்லாமல் இருந்தது. இப்போது 'ரெப்போ ரேட்' விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகளும் உடனடியாக இல்லாவிட்டாலும் வருகிற நிதி ஆண்டு முதல் அதாவது ஏப்ரல் முதல் வட்டியை குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அதற்குள் அடுத்த நிதிக்குழு கூட்டமும் நடந்து, மேலும் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் இப்போது குறைந்துகொண்டு இருக்கும் விலைவாசி மேலும் குறையவும், பொருளாதார வளர்ச்சி இன்னும் அதிகமாகவும் வாய்ப்பு இருக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொதுமக்களிடம் இருந்து தபால் நிலையங்களில் உள்ள 12 சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியும், வங்கிகளில் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டியும் ஏப்ரல் மாதம் முதல் குறையக்கூடும் என்பதால் அதை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மூத்த குடிமக்களுக்கும், பல செலவுகளுக்காக சேமித்து வைத்து முதலீடு செய்து இருக்கும் பொதுமக்களுக்கும் இழப்பாகவே இருக்கும்.
வங்கிகளில் 22.49 கோடி டெபாசிட் கணக்குகளில் ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆக இந்த 'ரெப்போ ரேட்' குறைப்பு என்பது கடன் வாங்கியவர்களுக்கு லாபமாகவும், சேமிப்புக்காக முதலீடு செய்பவர்களுக்கு இழப்பாகவுமாகவே இருக்கும்.