ARTICLE AD BOX
போதைப்பொருள் பழக்கம் கேடுதரும்.. போதையின் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
தலைநகர் சென்னை மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்களில், மாத்திரை, ஹெராயின், பவுடர் என போதைப்பொருட்கள் விலைக்கு ஏற்ப ரகரகமாக விற்பனை செய்யப்படுகிறது. போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணித்து, அதிகாரிகள் அதனை தடுக்க முற்பட்டாலும், மாபியா கும்பல் மழையில் துளிர்விடும் ஈசல் போல, ஒவ்வொரு நாளும் புதிய கோணத்தில் தனது சட்டவிரோத செயலை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த இளைஞர், தான் போதையினால் கைகளை இழந்து தவித்து வருவதாகவும், இதனால் தனது மனைவி 2 குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் தான் இருப்பதாகவும் வேதனை பட தெரிவித்து இருக்கிறார். மேலும், 2 நண்பர்கள் போதை பழக்கம் காரணமாக அவரை விட்டு விண்ணுலகம் சென்றுவிட, மற்ற சிலர் திருமணம் முடிந்து வேறொரு பகுதியில் வசித்து வருவதாவும் கூறுகிறார்.
இதையும் படிங்க: போதையில் அட்ராசிட்டி செய்த இளைஞன்.. வெளுத்து எடுத்த பொதுமக்கள்.!
நரம்பில் மருந்து செலுத்தி போதை
இதுகுறித்து இளைஞர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "கடந்த 10 ஆண்டுகளாக பீடி, சிகிரெட், மது என தொடங்கிய போதைப்பழக்கம் பின்னாளில் மாத்திரைக்கு சென்றது. மாத்திரை போதையும் ஒருகட்டத்தில் சலிப்படைய வைக்க நரம்பில் மருந்து செலுத்தி போதையை ஏற்றினோம். அந்த போதை மருந்தை சரிவர சுத்தம் செய்யாமல் நரம்பில் செலுத்தியபோது கை மறத்துபோனது. மருத்துவமனைக்கு சென்றால், எனது கையை எடுக்க வேண்டும் என கூறிவிட்டார்கள்.
இன்று நான் எனது தாயின் பராமரிப்பில் இருந்து வருகிறேன். போதையில் இருக்கும்போது எதோ ஒரு வேலை செய்து, மிரட்டி பணம் வாங்கி அதனை பயன்படுத்துவேன். ஆனால், இன்று கழிவறைக்கு சென்றால் கூட ஒரு துணை தேவைப்படுகிறது. அம்மா தான் என்னை கவனிக்கிறார். மனைவி 10 வயதுடைய மகன், 4 வயதுடைய மகளை அழைத்துக்கொண்டு பிரிந்து சென்றுவிட்டார். எனது போதை பழக்கம் வாழ்க்கையை சீரழித்து, இன்று நடுத்தெருவில் நிறுத்திவிட்டது.
நடுத்தெருவில் நிறுத்திவிட்டது
போதையை பயன்படுத்தும்போது ராஜா போல சுற்றி வந்தேன். எதைப்பற்றியும் கவலை இல்லை. ஆனால், அதன் உண்மையான தாக்கம் இப்போதுதான் புரிகிறது. 10 ஆண்டுகளாக நான் போதைக்கு அடிமையாக இருந்தாலும், மருந்து போதைக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் ஆளாகினேன். ஆனால், ஒருசில மாதத்திலேயே இந்த நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது. நான் மீண்டும் போதையை கையில் எடுக்கக்கூடாது என்பதற்காக கையையும் இழந்து இருக்கிறேன்" என வேதனைப்பட தெரிவித்தார்.
வீடியோ நன்றிகலாட்டா தமிழ்
இதையும் படிங்க: சென்னை: பெண்களின் கார் துரத்தப்பட்ட விவகாரம்; சிக்கிய கல்லூரி மாணவர்கள் கூட்டம்.. ஒருவர் கைது.!