ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை பயணம் திடீர் ரத்து

9 hours ago
ARTICLE AD BOX

சென்னை: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இன்றைய சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அவருக்கு எழுந்த கடும் எதிர்ப்புக்கு பணிந்து அவர் பயணத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க முடியாது.

தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே ₹2152 கோடி கல்வி நிதியை விடுவிப்போம் என்று கூறியிருந்தார். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். ஒன்றிய அமைச்சரின் இந்த பேச்சு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னை ஐஐடியில் ‘இன்வென்டிவ்-2025’ என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி இன்றும் (28ம் தேதி), நாளை (மார்ச் 1ம் தேதி) என 2 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தர்மேந்திர பிரதானின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க மறுத்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சென்னைக்கு வந்தால் அவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்படும் என்பதால் தான் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இணை அமைச்சரை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் தொடரும்..
இதனிடையே ஒன்றிய அமைச்சர் பயணம் ரத்து செய்யப்பட்டாலும், தமிழகம் வரும் இணை அமைச்சரை கண்டித்து இன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு வருகை தருவதாக இருந்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த எமது கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளும் திட்டமிட்டிருந்த நிலையில், தர்மேந்திர பிரதானின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் உணர்வெழுச்சிக்கும், மாணவர்களின் போராட்டங்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும். எனினும், ஐஐடியில் நடைபெறும் விழாவில் ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் கலந்துகொள்வதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மேந்திர பிரதான் என்ற ஒருவரை மட்டும் கண்டிப்பதல்ல, தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுத்து, ஹிந்தியையும், தேசியக் கல்விக் கொள்கையையும் திணிக்க முனையும் ஒன்றிய அரசைக் கண்டித்தே இந்தப் போராட்டம் என்பதால், ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கும் கருப்புக் கொடி காட்டுவது என்று மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு முடிவெடுத்துள்ளது. திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்துள்ள இந்த கூட்டமைப்பு சார்பில் ஐ.ஐ.டி. வாயிலில் காலை 9.30 மணியளவில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

The post ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை பயணம் திடீர் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article