ARTICLE AD BOX

image courtesy: PTI
புதுடெல்லி,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் மற்றும் புதிய துணை கேப்டனாக பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனான பாப் டு பிளெஸ்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 24-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்சை எதிர்கொள்கிறது.
இந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் இந்திய முன்னணி வீரரும், லக்னோ அணியின் முன்னாள் கேப்டனுமான கே.எல்.ராகுலை டெல்லி அணி ரூ. 14 கோடிக்கு வாங்கியது. இதனால் அவர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் தான் ஒரு வீரராக விளையாட விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் டெல்லி அணியில் அவர் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் பெரும்பாலான போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ஆடி வந்த அவர், இந்த சீசனில் டெல்லி அணிக்காக மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதற்கான காரணம் குறித்து வெளியான தகவலின் படி, டெல்லி அணியின் தொடக்க வரிசையில் பாப் டு பிளெஸ்சிஸ், ஜேக் பிரெசர் மெக்கர்க், அபிஷேக் போரல் ஆகியோர் உள்ளதால் மிடில் ஆர்டரில் வலு சேர்க்கும் விதமாக அணி நிர்வாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடப்பு சீசனிலிருந்து டெல்லி அணி வீரர் ஹாரி புரூக் விலகியதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் ஐ.பி.எல். அணிகளில் பெரும்பாலான போட்டிகளில் தொடக்க வீரராக ஆடி வந்த கே.எல். ராகுல், தற்சமயம் சர்வதேச போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறங்கி வருகிறார். அந்த வரிசையிலும் சிறப்பாக விளையாடி வரும் அவர், அண்மையில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.