ARTICLE AD BOX
உலகம் மாறி வரும் நிலையில், ஐ.நா.வும் காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த 1945-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இல்லை என்றும், அந்த கவுன்சிலில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பேசியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் பிரிவு விரிவுப்படுத்தப்படுவதை எதிா்க்கும் நாடுகள் குறுகிய பாா்வை கொண்டவையாகும். அந்த நாடுகளின் அணுகுமுறையால் முன்னேற்றம் ஏற்படாது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள முக்கிய நாடுகள், ஐ.நா. அமைப்புகளில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை பெறத் தகுதியானவை. உலகம் மாறி வரும் நிலையில், ஐ.நா.வும் காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் துணைப் பிரதமா் முகமது இஷாக் தா் பேசுகையில், ஜம்மு-காஷ்மீா் குறித்து சில கருத்துகளை தெரிவித்தாா்.
அவருக்குப் பதிலடி அளித்து பா்வதனேனி பேசுகையில், ‘உலகில் பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது. ஐ.நா. தடை விதித்துள்ள 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு அந்நாடு அடைக்கலம் அளித்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது.
பயங்கரவாதத்தின் மையமாக உள்ள பாகிஸ்தான், அதற்கு எதிராக போராடுவதாக தம்மை தாமே பாராட்டிக் கொள்வது முரணாக உள்ளது. ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹா்கத்-உல்-முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மூலம் பாகிஸ்தான் நிகழ்த்திய பயங்கரவாத செயல்களுக்கு இந்தியா பலியாகியுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான, இந்தியாவிடம் இருந்து பறிக்க முடியாத பகுதியாக ஜம்மு-காஷ்மீா் எப்போதும் இருக்கும்’ என்றாா்.