ARTICLE AD BOX
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், விளை நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகளால் பரபரப்பு நிலவியது. உத்திரமேரூரில் பல்லவர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வைரமேகன் தடாகம் என்றழைக்கப்படும் மிகப் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி சுமார் 4000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 20 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில் 13 மதகுகள் மற்றும் உபரிநீர் வெளியேற 3 கலங்கள் உள்ளன.
ஏரியின் 7வது மதகிலிருந்து வெளியேரும் உபரி நீரால் அ.பி.சத்திரம், நல்லூர், ஓங்கூர், பட்டாங்குளம், பருத்திக்கொள்ளை, மல்லியங்கரணை மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த 7வது மதகில் ழுழு கொள்ளளவு இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரி நீரினை விவசாயிகள் பயன்பாட்டிற்கு திறக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் துறை அலுவலர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் மதகினை திறக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஏரி நீரை நம்பி சுமார் 300 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் அலுவலக காவலாளியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர், நீர்வளத்துறை அதிகாரிகளிடம் போனில் தொடர்பு கொண்ட விவசாயிகள் மதகு நீரை திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகளால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post ஏரி தண்ணீரை திறக்க கோரி நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் appeared first on Dinakaran.