ARTICLE AD BOX
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன உற்பத்தி ஆலை தமிழ்நாட்டில் நிறுவப்படுமா?
சென்னை: எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனையை தொடங்க இருக்கும் நிலையில் எந்த மாநிலத்தில் இந்த நிறுவனம் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவ போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களும் எப்படியாவது டெஸ்லா நிறுவனத்தின் ஆலையை தங்கள் மாநிலத்தில் கொண்டுவர வேண்டுமென போட்டி போடுகின்றன.
டெஸ்லா நிறுவனத்தை பொருத்தவரை துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் நகரத்தில் உற்பத்தி ஆலை நிறுவுவதுதான் சரியாக இருக்கும் என திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது . அந்த வகையில் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இந்த போட்டியில் முன்னிலை வகிக்கின்றன . டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் இந்த நிறுவன கார்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஏதுவாக அரசு கொள்கைகளை மாற்றியுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய வாகனங்களை விற்பனை செய்ய உள்ளது. இதன் பிறகு இந்தியாவில் உற்பத்தி ஆலையும் நிறுவ இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும்போது அதன் மலிவு விலை மாடல் காரே 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.
எனவே இங்கேயே தயாரித்து விற்பனை செய்தால் மட்டுமே டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில இயங்கும் மின்சார கார் உற்பத்தி நிறுவனங்களோடு போட்டி போட முடியும் இந்திய சந்தையை கைப்பற்ற முடியும். இந்த நிலையில் தமிழ்நாடு எப்படியாவது டெஸ்லா நிறுவன உற்பத்தி ஆலையை தங்கள் மாநிலத்திற்குள் கொண்டு வர வேண்டும் என தீவிரமாக இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஹூண்டாய், பென்ஸ் ,பிஎம்டபிள்யூ, மகேந்திரா, ரெனால்ட் உள்ளிட்ட கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவி இருக்கின்றன. சீனாவை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி தமிழ்நாட்டில் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தன்னுடைய ஆலையை அமைத்திருக்கிறது. டாடா மோட்டார்ஸ் மற்றும் வியட்னாமி சேர்ந்த வின்பாஸ்ட் ஆகிய நிறுவனங்களும் தமிழ்நாட்டில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு தங்களுடைய கார் உற்பத்தி ஆலைகளை அமைக்க உள்ளன.
இவற்றில் பெரும்பாலும் மின்சார கார்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இது தவிர இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா தன்னுடைய ஆலையை தமிழ்நாட்டில் தான் நிறுவி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாடு வாகன உற்பத்தி மற்றும் வாகன உபகரண உற்பத்தி நிறுவனங்களின் முதலீட்டை பெருமளவில் ஈர்த்திருக்கிறது என கூறும் எம்டி வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் துறைமுகம், விமான நிலையம் ஆகியவை அருகருகே இருப்பதால் டெஸ்லா நிறுவனத்திற்கு ஏற்ற இடமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அது தவிர தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி ஆலை நிறுவுவதற்கு மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை துறைமுகம் , எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாக பெருமளவில் வர்த்தகம் நடைபெறுகிறது .
2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக டெஸ்லா உற்பத்தி ஆலைக்கு சென்றிருந்தார். இந்தியாவில் வாகன உற்பத்தி பிரிவினை பொறுத்தவரை மூன்றில் ஒரு பங்கு வாகன உற்பத்தி ஆலைகள் தமிழ்நாட்டில் தான் குறிப்பாக சென்னையில் தான் இருக்கின்றன. அதேபோல வாகனங்களுக்கான உபகரணங்களை தயாரிக்கும் ஆலைகளில் 35 சதவீதம் சென்னையில் தான் இருக்கின்றன என பொருளாதார நிபுணர் முத்துகிருஷ்ணன் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படக்கூடிய மின்சார வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தங்களுடைய ஆலையை நிறுவுவது தான் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என அவர் கூறுகிறார்.
Story written by: Devika