ARTICLE AD BOX
ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.. மியூச்சுவல் பண்டில் இதுக்கெல்லாம் வரிவிதிப்பு உறுதி..
சமீபகாலமாக இந்தியர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பலரும் மியூச்சுவல் பண்ட் வாயிலாக முதலீட்டை மேற்கொள்கின்றனர். எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்து வருகிறார்கள். மியூச்சுவல் பண்டுகள் அவற்றின் பல்வகைப்படுத்துதல் மற்றும் தொழில்முறை மேலாண்மை காரணமாக பரவலாக விரும்பப்படும் முதலீட்டு விருப்பமாகும். அதேசமயம் மியூச்சுவல் பண்டில் வரிவிதிப்பு உண்டு, அதனை சரியான புரிந்து கொள்ளவில்லை என்றால் சிக்கலானதாக இருக்கலாம். எனவே மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் வரி தாக்கங்களை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதன் மூலம் தங்களது வருமானத்தை மேம்படுத்தவும் பொறுப்புகளை குறைக்கவும் முடியும்.
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் போது, இரண்டு விஷயங்களில் வரி விதிக்கப்படும். ஈவுத்தொகை (டிவிடெண்ட்) மற்றும் மூலதன ஆதாயம் ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படும்.

டிவிடெண்ட் மீதான வரி
டிவிடெண்ட் முதலீட்டாளர்களுக்கு செயலற்ற வருமானத்திற்கான பொதுவான ஆதாரமாகும். இருப்பினும் டிவிடெண்ட் மீதான வரி விதிப்பு ஒட்டு மொத்த வருமானத்தை பாதிக்கிறது. மியூச்சுவல் பண்டிலிருந்து பெறப்படும் டிவிடெண்ட் தொகை முதலீ்ட்டாளரின் வரி விதிப்பு வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அவர்களின் பொருந்தக்கூடிய வருமான வரி அடுக்கின்படி வரி விதிக்கப்படும். ஒரு நிதியாண்டில் முதலீட்டாளருக்கான டிவிடெண்ட் தொகை ரூ.5,000க்கு மேல் இருந்தால், அதனை வழங்குவதற்கு 10 சதவீத டிடிஎஸை கழித்துக் கொண்டே மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அளிக்கும்.
அதிக வரி வரம்புகளில் உள்ளவர்களுக்கு டிவிடெண்ட் வரிவிதிப்பு நிகர வருமானத்தை கணிசமாக பாதிக்கும். பொறுப்புகளை குறைப்பதற்கும், வரிக்கு பிந்தைய வருவாயை அதிகரிப்பதற்கும் பயனுள்ள வரி திட்டமிடல் மிக முக்கியமானது.
மூலதன ஆதாயங்கள்
மியூச்சுவல் பண்ட் யூனிட்கள் விற்கப்படும்போது மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். மூலதன ஆதாயங்கள் நீண்ட கால மற்றும் குறுகிய கால ஆதாயங்கள் என 2 வகை உள்ளன. யூனிட்டை 12 மாதங்களுக்குள் விற்பனை செய்தால் அது குறுகிய கால ஆதாயமாகவும், 1 ஆண்டுக்கு மேல் வைத்திருந்தால் அது நீண்ட கால ஆதாயம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர் யூனிட்டை வைத்திருக்கும் காலத்தின் அடிப்படையில் வரி விகிதங்கள் அதற்கேற்ப மாறுபடும்.
Story written by: Subramanian