ARTICLE AD BOX
TVK Leader Vijay Political Dialogue : எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய் இப்போது தனது ஒவ்வொரு அரசியல் மேடையிலும் என் நெஞ்சில் குடியிருக்கும் எல்லோருக்கும் என்று அரசியல் டயலாக் பேசி வருகிறார்.

TVK Leader Vijay Political Dialogue : எம்ஜிஆர், ஜெயலலிதா, கமல் ஹாசன், சீமான், விஜயகாந்த் வரிசையில் அடுத்ததாக சினிமா பின்னணியை வைத்து அரசியலுக்கு வந்தவர் நடிகர் விஜய். கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். முதல் மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். விஜய் அரசியலுக்கு வந்த நிலையில் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் மட்டும் இப்போது நடித்து வருகிறார்.

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அரசியல் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சினிமா பாணியில் சொல்ல வேண்டுமானால் தற்போது வரையில் டீசர், டிரைலரை வெளியிட்டு வருகிறார். இனிமேல் தான் தமிழக வெற்றிக்கழகத்தின் மெயின் பிக்சரை பார்க்க போகிறோம். இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக்கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இப்போது நடைபெற்று வருகிறது.

சென்னை மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2,500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் விஜய்யுடன் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுவாக விஜய் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பி என்று பேசுவது வழக்கம். அதே டயலாக்கைத் தான் இப்போது தனது அரசியல் மேடைக்கும் பயன்படுத்தி வருகிறார். ஒவ்வொரு அரசியல் மேடையிலும் தளபதி விஜய் என் நெஞ்சில் குடியிருக்கும் எல்லோருக்கும் என்று பேசி வருகிறார். இதைப் பார்க்கும் போது விஜய் இப்போது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் பேச்சை பின்பற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.

சினிமா பின்னணியை வைத்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆரும் சரி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலிதாவும் சரி அரசியல் உரையின் போது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே, என் உயிரினும் மேலான கழக உடன் பிறப்புகளே, மக்களால் நான் மக்களுக்காக என்று அரசியல் டயலாக்குடன் தான் ஒவ்வொரு அரசியல் உரையையும் தொடங்குவார்கள்.

தான் எதற்காக ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே என்று கூறுகிறேன் என்பதற்கு எம்ஜிஆர் கூட ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அதாவது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு அதிகளவில் ரத்தம் தேவைப்பட்டது. இதற்கு பலரும் ரத்தம் கொடுக்க முன் வந்தனர். அந்த ரத்த துளிகள் தனது உடலில் இருப்பதால் தான் தான் மனிதனாக இருக்கிறேன். அப்போது எனது உடலில் செலுத்தப்பட்ட ரத்தம் யாருடையது என்று எனக்கு தெரியாது. ஆனால், அது பலரது ரத்தம் என்பதால் அனைவரையும் நான் என் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளே என்று உரிமையுடன் அழைக்கிறேன்.

அதை நினைவுபடுத்தி தான் கடிதம் எழுதும் போதும் சரி மேடையில் பேசும் போதும் சரி என் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளே என்று குறிப்பிடுகிறேன் என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று தான் தளபதி விஜய், அவர் இந்த நிலையில் இருக்க முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் தான். அதனால் தான் அவர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நெஞ்சில் குடியிருக்கும் என்று பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.