ARTICLE AD BOX
வெற்றி கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? முயற்சி பயிற்சி இவைகள் மட்டும் முக்கியமல்ல, நம்மில் சில பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக கீழ்கண்ட ஐந்து விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தினால் போதும் என்றைக்குமே நீங்கள் வெற்றியாளர்தான்.
நம்பிக்கை
நம்மிடம் இருக்கும் சிறந்த பழக்க வழக்கங்களே பிறரை நம்மை நோக்கி ஈர்க்கும். முதலில் நமக்கு நம் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். நான் அழகானவ(ன்)ள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் இருக்கட்டும். அழகு என்பது சருமத்தில் மட்டுமில்லை. சருமத்தை பராமரித்து அழகுபடுத்திவிடலாம். கவர்ச்சியைவிட நம்பிக்கை மேலானது. நம்பிக்கையின் பலனையும், ஈர்ப்பையும் உங்கள் வெற்றிதான் மற்றவர்களுக்கு உணர்த்தும்.
நேர்த்தியான உடை
'நான் கலராக இல்லை. எலும்பும், தோலுமாக இருக்கிறேன். எனக்கு எந்த டிரெஸ் போட்டாலும் நல்லா இருக்காது' என்று எண்ணாதீர்கள். நேர்த்தியாக உடை அணியுங்கள். உடை அணிவது ஆளைக் கவர்வதற்கல்ல என்றாலும், பார்ப்பவர்களை மதிக்கத் தூண்டுவதும் நாம் அணியும் உடைதான். அது உங்களுக்கு வசதியானதாகவும் இருக்கட்டும். நல்ல மரியாதை நல்ல நட்பு எல்லாவற்றையுமே நல்ல ஆடைகள் உருவாக்கித் தரும். நேர்த்தியான ஆடை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
கனிவான பழக்கம்
வீட்டுக்குள்ளேயே கிணற்றுத் தவளையாக முடங்கிக்கிடந்தால் இந்த உலகத்தின் அதிசயங்கள் உங்களுக்கு தென்படாமலே போகும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால்தான் வெற்றியின் முகம் உங்களுக்கு காட்சி தரும். எனவே ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் இணைந்து சமூக சேவை செய்யும்விதமாக வெளியே கழித்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது உங்களுக்கு புதிதாக பலர் அறிமுகமாகலாம். நீங்களும் முதலில் உங்களை அறிமுகம் செய்து பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பழக பழகத்தான் நம் பலமும், பலவீனமும் தெரியும். பிறகு நம் நடையை மாற்றி வெற்றிநடை போடலாம்.
நட்பை தேர்வு செய்யுங்கள்
வெற்றிக்குத் துணை நம்பிக்கை மட்டுமல்ல, நட்பும்தான். யாருடன் சினேகிதம் கொள்கிறோமோ அவர்களின் பழக்கம் நமக்கும் ஒட்டிக்கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் நட்பு கொள்வதில் அதிக கவனம் அவசியம். அதேபோல அருகில் இருப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியோருடன் நட்புறவுடன் இணக்கமாக பழகுவதும் வாழ்க்கையில் வெற்றிக்கு உதவும். உங்களின் அழைப்பை மதிப்பவருடனும், மரியாதையுடன் பழகுபவருடனும், உங்கள் நலனில் அக்கறை கொள்பவருடனும் நட்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள்
நீங்கள் நிறைவான தோற்றத்தில் இருக்கும்போது பலரும் உங்களைப் பற்றி பேசிக்கொள்வார்கள். அதுபோல குறையான தோற்றத்தில் இருந்தாலும் பலரும் விமர்சிப்பார்கள். புகழ் பேச்சில் மயங்காமலும், குறை காணும் விமர்சனங்களில் கலங்காமலும் இருங்கள்.