குஜராத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பிடிப்பட்டுள்ளது. இதை தவிர, 11 ஆடம்பர வாட்ச்கள், 1.37 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கசிந்தது ரகசிய தகவல்:

எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் பல்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், தீவிரவாத தடுப்பு பிரிவுடன் இணைந்து சோதனை நடத்தினர். தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் அளித்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, சுமார் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 87.92 கிலோகிராம் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன. பெரும்பாலான தங்கக் கட்டிகள் வெளிநாட்டில் செய்யப்பட்டவையாக தெரிகிறது. இதன் மூலம், அவை இந்தியாவிற்குள் கடத்தப்பட்டதை என்பது தெரிய வந்துள்ளது.

தங்கம், வைரம், கடிகாரம்:

தங்கத்தைத் தவிர, வைரங்கள் பதித்த படேக் பிலிப் கடிகாரம், ஜேக்கப் & கோ கடிகாரம், ஃபிராங்க் முல்லர் கடிகாரம் உள்ளிட்ட 11 ஆடம்பர கடிகாரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வைரங்கள் மற்றும் பிற விலைமதிப்பற்ற கற்கள் பதித்த 19.66 கிலோ எடையுள்ள நகைகளும் இதில் அடங்கும். கடிகாரங்கள் மற்றும் நகைகளின் மதிப்பீடு உடனடியாக கிடைக்கவில்லை. மேலும், 1.37 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்த சோதனை பெரிய அடியாகும். பொருளாதார குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தனது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. விசாரணைகள் தற்போது நடந்து வருகின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ), இந்திய கடலோர காவல்படையுடன் (ஐசிஜி) இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், மாலத்தீவு நோக்கி சென்ற கப்பலில் இருந்து 33 ரூபாய் கோடி மதிப்புள்ள 29.954 கிலோ ஹாஷிஷ் (கஞ்சா) ஆயிலைக் கைப்பற்றியது.