ARTICLE AD BOX
என் பையனுக்கு அப்படி நடந்தால் தப்பு.. என்ன மகன் பற்றி தனுஷ் இவ்வளவு ஓபனா சொல்லிட்டாரு?
சென்னை: கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கிக்கொண்டிருக்கிறார் தனுஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் தோல்வியடைந்தது. அடுத்ததாக குபேரா, இட்லி கடை ஆகிய படங்கள் அவரது நடிப்பில் வருகின்றன. இவற்றில் இட்லி கடை படத்தை அவரே இயக்குகிறார். அதேபோல் அவர் இயக்கி அவரது உறவினர் ஹீரோவாக நடித்திருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் இந்த மாதம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் கைகளில் இப்போது ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; தானே இயக்கி இட்லி கடை என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். அருண் விஜய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இது தவிர்த்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், போர் தொழில் இயக்குநருடன் ஒரு படம், மாரி செல்வராஜுடன் ஒரு படம், இளையராஜா பயோபிக், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம் என பல படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன.
ராயன் தோல்வி: தனுஷ் தனது கரியரில் ராயன் திரைப்படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். அது அவரது 50ஆவது படம் என்பதால் அவரே இயக்கி நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பெரிய நம்பிக்கையுடன் அந்தப் படத்துக்கு காத்திருந்த தனுஷுக்கு ரிசல்ட் அவர் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. படத்துக்கு மோசமான விமர்சனம் தோல்வி மட்டுமின்றி ட்ரோலையும் சந்தித்தது. இதனால் தனது அடுத்தடுத்த படங்களை ஹிட் படங்களாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் பிஸியான தனுஷ்; தனது உறவினரை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஒரு இயக்குநராக ராயனில் விட்டதை நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் பிடிக்க தயாராக இருக்கிறார். படமானது இந்த மாதம் 21ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சுற்றி சுழலும் தனுஷின் வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக சூறாவளி அடித்தது.
ரஜினியின் கபாலி பட தயாரிப்பாளர் தற்கொலை.. வாடகை வீட்டில் என்ன நடந்தது?.. போலீஸ் விசாரணை
மனைவியுடன் பிரச்னை: அதாவது கடந்த 2004ஆம் ஆண்டு அவருக்கும், ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்துக்கு பிறகு இரண்டு பேருக்கும் யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் பிறந்தார்கள். தனுஷும், ஐஸும் தங்களது வாழ்க்கையை சுமூகமாக ஓட்டிக்கொண்டிருந்த சூழலில் சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து தனித்தனியாக வாழ ஆரம்பித்தார்கள். ஆனால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு செல்லவில்லை.
ஆனால் கடந்த வருடம் நீதிமன்ற படிகளை மிதித்தார்கள். அவர்களுக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. எப்படியும் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மகன்களை பொறுத்தவரை தாய், தந்தை என இரண்டு பேரிடமும் மாற்றி மாற்றி இருப்பார்கள் என தெரிகிறது. இதற்கிடையே தனுஷின் மூத்த மகன் யாத்ரா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஒரு பாடலில் சில வரிகளை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் பேட்டி: இந்நிலையில் தனுஷ் தனது மகன் யாத்ரா குறித்து பேசியிருக்கும் பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நான் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் எனது மீது கேமரா ஃப்ளாஷ் அடிப்பதற்கு 16 வருடங்கள் ஆகிவிட்டன. அந்த ஒரு கேமரா 10 கேமராக்கள் ஆவதற்கு கிட்டத்தட்ட மூன்று சூப்பர் ஹிட் படங்களை நான் கொடுக்க வேண்டியிருந்தது. அதேபோல் கேமரா ஃப்ளாஷ் அடிப்பதற்கு அவ்வளவு கஷ்டங்களை பலர் படுகிறார்கள். அதேசமயம் எனது மகன் என்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் அந்த ஃப்ளாஷ் அவர் மீது அடிக்கக்கூடாது. அவராக உழைத்து முன்னேற வேண்டும்" என்றார்.