ARTICLE AD BOX
இயக்குநர் ஷங்கரின் 10 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ள நிலையில், இது சட்டவிரோதம் என்று கூறியிருக்கிறார் ஷங்கர்.
கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். ஒரு பாட்டுக்கே கோடி கணக்கில் பணம் போட்டு எடுப்பவர். இவர் இயக்கிய முதல் படமான ஜெண்டில் மேன் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து அவர் காதலன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.
சமீபத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக தோல்வியடைந்தன.
அந்தவகையில், எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் அவர் எழுதிய புத்தகத்தின் கதையும் எந்திரன் கதையும் ஒரே மாதிரி இருந்தது உறுதியானது. இதனால், காபி ரைட்ஸ் வழக்கில் அவரது 10.11 கோடி அளவிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.
இதுகுறித்து ஷங்கர் பேசுகையில், “எந்திரன் கதை காப்புரிமை வழக்கில், ஆரூர் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது. அதனை புறகணித்துவிட்டு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தன்னிட்சையான அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் எனது சொத்துக்களை முடக்கியுள்ளனர்.
சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக அமலாக்கத்துறையிடம் இருந்து எந்தவித தகவலும் எனக்கு அளிக்கப்படவில்லை. எந்திரன் படம் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கையால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன் .
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். அத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கை தொடர்பாக மறு பரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன். ஒரு வேளை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்.” என்று பேசியுள்ளார்.
இதனால், இந்த விஷயம் பெரிய அளவில் வெடிக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த கதை புத்தகத்தின் கதை என்று தெரிந்தப் பின்னர், ரசிகர்கள் மீம்ஸ் ஷேர் செய்து வருகிறார்கள்.