ARTICLE AD BOX
‘என் கவிதைகளை பாடப்புத்தகங்களில் வைக்காதீர்கள்’ என்று எந்த கவிஞராவது சொல்வாரா...? ஒருவேளை சொன்னால் 'இவன் என்னடா பிழைக்கத் தெரியாத கவிஞனாக இருக்கானே’ என்று ஏற இறங்க பார்ப்பார்கள்.
’சிதம்பர நினைவுகள்’ புத்தகம் தமிழில் மிக பிரபலம். இதை எழுதிய பாலச்சந்திரன் சுள்ளிக்காடுதான், இந்த தடாலடி அறிவிப்பை அறிவித்துள்ளார். அதுவும் இரண்டாவது முறையாக.
மலையாளத்தில் நவீனக்கவி என்று அழைக்கப்படும் இவருக்கு, நண்பரான பள்ளி ஆசிரியர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், “ஒரு கவிஞருக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய தண்டனை, அவரது படைப்புகளைப் பாடப்புத்தகத்தில் சேர்ப்பதுதான்! உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது!" – இதை படித்தபின்னர்த்தான் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தனது கவிதைகளைப் பள்ளி, பல்கலைக்கழக பாடப்புத்தகங்களில் வைக்க வேண்டாம் என மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, பின்னர்தான் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு நேற்று தனது நண்பர்களுக்கு எழுதிய குறிப்பில், கவிஞன் பொது மக்களுக்காகவோ, மாணவர்களுக்காகவோ, ஆசிரியர்களுக்காகவோ அல்லது ஆராய்ச்சியாளர்களுக்காகவோ கவிதை எழுதுவதில்லை. அவர் தனது படைப்புகளை ஒத்த எண்ணம் கொண்ட வாசர்கள் குழுவுக்காகவே எழுதுகிறார்.
எனது கவிதைகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டாம் என முன்னரே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
கவிதைகளைப் படிக்க ஆர்வமில்லாத மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. பாடத்திட்டத்தில் சேர்த்தால், ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கவும் மாணவர்கள் கற்றுக் கொள்ளவும் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
என்னுடைய கவிதைகளும் நானும் உயிர்வாழ பாடத்திட்டக் குழுவின் ஆதரவு தேவையில்லை. நான் வெகுஜனங்களின் கவிஞன் இல்லை. ஒத்த எண்ணம் கொண்ட வாசகர்களின் கவிஞன். அவர்களுக்காகவே என்னுடைய கவிதைகள் எழுதப்பட்டன,’ என்று கூறி உள்ளார்.
கவிஞரின் இந்த கோபத்துக்குக் காரணம், அவரின் புகழ்பெற்ற ‘சந்தர்சனம்’ என்ற கவிதை தொடர்பான கேள்விக்கு பதினோராம் வகுப்பு மாணவர் அளித்த பதிலே.
இந்த மாணவரின் பேப்பரை திருத்திய கவிஞரின் ஆசிரியர் நண்பர் வைத்த ’வத்தி’யால் கவிஞர் கொதித்து போயுள்ளார். அப்படி என்னதான் அந்த மாணவர் எழுதி இருப்பார்?
நம் தமிழ் நவீன கவிஞர்களின் கவிதைகள் மாணவர்களிடம் என்ன பாடுபடுகின்றனவோ?