என் அனுபவத்தில் சொல்றேன்! அகழ்வாராய்ச்சி முதல் ஏ.ஐ. வரை ஸ்டாலின் பட்ஜெட் “பக்கா”! 

6 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கியது பாராட்டுக்குரியது என்றும், அகழ்வாராய்ச்சி முதல் ஏஐ வரை அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2025 – 2026 பட்ஜெட் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழகம் மனிதவள மேம்பாட்டில் முன்னிலையில் உள்ள மாநிலம். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மூலம் இது இன்னும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்கும் தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும் தேவையானவற்றை சற்றும் தயக்கம் இன்றி பட்ஜெட்டில் கொடுத்திருக்கிறார்கள். மிகவும் வரவேற்கத்தக்கது. மனிதவள மேம்பாடு என்பது கல்வி மற்றும் சுகாதாரத்தை அடிப்படையாக கொண்டதாகும். இது எல்லோருக்கும் போய் சேர வேண்டும். வசதி உள்ளவர்கள் கல்வி, சுகாதாரத்தை தாங்களாகவே தேடிக்கொள்வார்கள். வசதி இல்லாதவர்களுக்கு அந்த வாய்ப்புகளை வழங்க வேண்டியது அரசுடைய கடமையாகும். இதுவரை திமுக அரசு செயல்படுத்திய அனைத்து திட்டங்களும் இது போன்றவை தான். நான் முதல்வன் திட்டத்தில் தொடங்கி, மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் வரை அதுபோன்றதுதான்.

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு என்பது திமுக அரசின் முதல் பட்ஜெட்டில் இருந்து தற்போது 45 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.  கல்விதான் அனைத்துக்கும் அடிப்படையாக உள்ளது. அந்த கல்விக்கான வசதிகளை, அனைத்து தரப்பினருக்கும் செய்து தர வேண்டியது அவசியமாகும். அந்த காலத்தில் போடு ஸ்கூல் தொடங்கி, பொதுமக்களிடம் நிதியை பெற்று மாணவர்களுக்கு கல்வி கற்பித்தனர். பள்ளிகளுக்கு நிலத்தையும், பணத்தையும் கொடுத்தவர்களின் பெயரில் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன. காமராஜர் பள்ளிகளை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக திமுக கல்லூரிகளை தொடங்கி வைத்தது. எம்ஜிஆர் பொறியியல் கல்லூரிகளை தொடங்கி வைத்தார். இரு மொழி கொள்கையை அமல்படுத்தியதால் பொறியியல்  கல்லுரியில் படித்துவிட்டு ஐ.டி. துறையில் நுழைந்தனர்.

திமுக சார்பில் எம்.பி ஆக இருந்த முரசொலி மாறன், இந்தியாவிலும் உலகிலும் நடைபெறுவனவற்றை கூர்ந்து கவனித்து, தகவல் தொழில்நுட்ப துறையில் நுழைய வேண்டும் என்று சொல்கிறார். கலைஞர் அதற்கு முழுமையான ஆதரவை வழங்கினார். அதன் காரணமாகவே இன்று பெங்களுருவுக்கு நிகராக தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை எட்டியிருக்கிறோம். இதற்கு அவர்கள் இருவரும் அடிப்படையாக இருந்தனர். முதல் தலைமுறை மாணவர்களாக இருந்தவர்கள் பலர் இன்று அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்த்து வளம் தேடுகிறார்கள். அது எந்த அளவுக்கு என்றால்? உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை அமெரிக்காவில் தமிழர்களுடை ஃபெட்னா என்ற அமைப்பு நடத்திக்காட்டினர். அந்த பொருள் வளம் இந்த படிப்பினால் வந்ததுதான். அதனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை கல்விதான். அந்த கல்வி எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்ற கொள்கையில் மிகவும் திடமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு இருக்கிறது. எங்களை போன்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாம் மேற்குவங்க கேடரிலும், குஜராத் கேடரிலும், மத்திய பிரதேச கேடரில் இருந்துவிட்டு இங்கு வந்து பார்க்கிறோம். அப்படி பார்க்கிறபோது எங்களுக்கு வித்தியாசம் தெரிகிறது. எப்படிப்பட்ட முன்னேற்றம் இங்கே தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்று தெரிகிறது. இதை பார்க்கும்போது மனதிற்கு நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். இதற்கான தேவை என்பது நிச்சயமாக உள்ளது. ஆதிச்சநல்லுரில் மிகப்பெரிய இடுபாட்டை கண்டறிந்தனர். அங்கு காக்கசியன், திராவிடர்கள், ஆரியர்கள் என்று அனைத்து விதமான மக்களின் மண்டை ஓடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது. அப்படி என்றால் பலவிதமான மக்கள் அங்கே வாழ்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தமாகும். அதனால் அந்த பகுதி இன்றைய பெங்களுரு, சென்னை போன்று ஒரு பெருநகரமாக இருந்திருக்கும். அந்த புதை குழியை கண்டுபிடித்த மத்திய தொல்லியல் துறையினர் அருகில் இருந்த நகரத்தை கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனார் மதுரையில் நாளங்காடி, அல்லங்காடி என்று 2 அங்காடிகள் இருந்ததாக குறிப்பிடுகிறார். எங்கெல்லாம் நதிகள் இருந்ததோ அதற்கு பக்கத்தில் நாகரிகங்கள் இருந்தது.

கீழடியை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஏனென்றால் கீழடி என்பது முடிவு அல்ல. கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழி இருந்தது என்பதுடன் முடிந்துவிடவில்லை. கீழடி என்பது தொடக்கம்தான். அடுத்து மணலுர் போக வேண்டும். சிவகளை போக வேண்டும். இன்னும் செல்ல வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. பல இடங்கள் கடலுக்குள் சென்றுவிட்டன. காவிரிபூம்பட்டினத்தை பார்க்க வேண்டும். 5300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே இரும்பு உபயோகத்தில் இருந்து தெரிந்துவிட்டது. இதனை ஸ்டாலின் சொல்லிவிட்டாரே என்று பலரும் வயிறு எரிகிறார்கள். ஸ்டாலின் இதனை கண்டுபிடிக்கவில்லையே. கண்டுபிடித்தது தொல்பொருள் ஆய்வாளர்கள். கார்பன் வயதுக்கணிப்பை விட அதிநவீன  பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு என்பது இந்தியாவுக்குள் தான் இருக்கிறது என்பதை பாஜகவினருக்கு சொல்லித்தர வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். தமிழர் நாகரிகம் என்பது இந்தியாவினுடைய நாகரிகம் தானே?. ஏதோ நெல்லை வைத்து கண்டுபிடித்துவிட்டு 5,300 ஆண்டுகள் என்கிறார்கள் என்று விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். நெல் என்பது வேட்டுவச் சமுதாயத்தில் இருந்து நாம் வேளாண்மை சமுதாயமாக மாறியதற்கு முதலாவது அடையாளமாகும்.

கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் நீட்டிப்பு!Photo: TN Govt

இதுவரை நாகரிகம் என்பதை எதை அளவுகோலாக வைத்து சொன்னார்கள் என்றால் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து நைல் நதி நாகரிகம் வரை பெரிய பெரிய பட்டணங்கள், நகரங்கள் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டுதான். இப்போது அதுபோன்ற நகரத்தை தமிழ்நாட்டில் நாம் பார்க்க முடியவில்லையே என்கிறார்கள். இதுவரை உலகத்தை  எப்படி நினைத்துக்கொண்டிருந்தோம் என்றால் முதலில் கற்காலம், அடுத்து வெண்கலம், இறுதியாக இரும்புக்காலம் என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு  அனைத்து நாகரிங்களும் சமகாலத்தில் நடைபெற்றதாக தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். சிலுவைப் போரில் கிறிஸ்தவர்கள் உறுதிமிக்க டமாஸ்கஸ் ஸ்வார்ட் எனப்படும் கத்தியை பயன்படுத்தினார்கள். எடைகுறைவான, அதேவேளையில் உறுதிமிக்கதாகவும் விளங்கிய அந்த கத்தியின் முன்னால் எதிரிகளால் நிற்க முடியவில்லை. இந்த டமாஸ்கஸ் ஸ்வார்டுக்கான இரும்புகள் தென்னிந்தியாவில் இருந்துதான் சென்றுள்ளது. ஆதாரத்தோடு பேசுகிறோம். இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை சிலரிடம் இல்லை.

இத அடுத்து எங்கே போகும்?. நகர் நாகரிகமாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. தமிழர் நாகரிகத்திலும் நகரங்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நெல் விவசாயம் செய்துள்ளனர் என்றால், 5300 ஆண்டுகளுக்கு முன்பாகவே வேட்டுவச்சமுதாயம், வேளாண் சமுதாயமாக மாறி விட்டது. அப்போது நாம் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். அகழ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்-க்கு போன பட்ஜெட்டிலேயே ரூ.5 கோடி நிதியை கொடுத்திருக்கிறார்கள். அதனால் பழமையை மதிக்கிறோம். புதுமையை ஏற்கிறோம்.

5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் - திராவிடர்களே மூத்த குடிமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பட்ஜெட்டில் சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ஏற்றுமதியாளர்கள் பெடரேஷனில் இயக்குநராக சில காலம் பணிபுரிந்துள்ளேன். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயில், 60 முதல் 70 சதவீதம், நேரடியாகவும், மறைமுகமாகவும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் பொருட்களின் வாயிலாகத்தான் வருகிறது. காத்ரேஜ் அந்த காலத்தில் மிகப்பெரிய பீரோ ஒன்றுறை உருவாக்கினார்கள். ஹவுராவை சேர்ந்த சிறு நிறுவமாகிய ஸ்டோர் வெல் நிறுவனம்தான் அந்த பீரோவின் பெரும்பாலான பணிகளை செய்கிறது. அதில் இறுதிகட்ட பெயிண்ட் அடிப்பதும்,  பூட்டுகள் மட்டும்தான் கோத்ரேஜ் நிறுவனத்தின் பணியாகும். எம்எஸ்எம்இ நிறுவனங்களில் உங்களுக்கு முதலீட்டின் அளவு குறைவு, வேலைவாய்ப்பு அளவு அதிகம். இதன் காரணமாக எம்எஸ்எம்இ நிறுவனங்களால் நாட்டினுடைய செல்வம் பரவலாக்கப்படும்.

சிப்காட் தொழிற்பூங்காக்கள் நெல்லை, ராமநாதபுரம், மதுரையில் அமைவது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் அந்த இடங்களில் தொழில் மற்றும் தொழில் முனைவோர்கள் வளர வேண்டிய ஒரு கட்டாயமும் உள்ளது. வடதமிழ்நாடும், மேற்கு தமிழ்நாடும் வளர்ந்திருக்கிறது. ஆனால் தெற்கும், கிழக்கும் வளர வேண்டி உள்ளது. ஆனால் கர்நாடக மாநிலத்திற்கு வரும் மொத்த வருவாயில் 80 சதவீதம் வரை பெங்களுருவில் இருந்துதான் வருகிறது. அதேபோல், ஒருங்கிணைந்த ஆந்திராவில் 60 முதல் 70 சதவீத வருவாய் ஐதராபாத்தில் இருந்துதான் வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. அந்த காலத்திலேயே பல்வேறு இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன. இதனால் அந்தந்த மாவட்டங்களிலேயே வேலை வாய்ப்புகள் கிடைத்தன. அதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது என்பது நம்முடைய தொழில் மேன்மையை இன்னும் அதிகரிப்பதற்கான முக்கியமான நடவடிக்கையாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article