ARTICLE AD BOX
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் டொனால்டு ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாட்டு அதிகாரிகள் இதுதொடர்பாக சவூதி அரேபியாவில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த ஆலோனைக் கூட்டத்தில் உக்ரைன் சார்பில் எந்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை.
இதனிடையே, ”தங்களுடன் ஆலோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்க முடியாது” உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”தேர்தல்கள் இல்லாத ஒரு சர்வாதிகாரிதான் ஜெலன்ஸ்கி. அவர் வேகமாக நகர்ந்துவிடுவது நல்லது. இல்லையெனில், அவருக்கென ஒரு நாடுகூட இருக்கப் போவதில்லை” என எச்சரித்திருந்தார். இதற்கு ஜெலன்ஸ்கி, “ரஷ்யா உருவாக்கிய தவறான தகவல் உலகத்தில் ட்ரம்ப் வாழ்கிறார். புதினை தனிமையில் இருந்து விடுவிக்க உதவுகிறார். இது உக்ரைனுக்கு சாதகமானதல்ல” எனத் தெரிவித்திருந்தார். அவருடைய இந்தப் பதிலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ”உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ’’உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு பதிலாக தனது பதவி விலகலைப் பரிமாறிக் கொள்ளலாம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.