ARTICLE AD BOX
மதுரை: மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்.வசந்த் தலைமையில் நேற்று நடந்தது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சரும், மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ, தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘பொறுத்தது போதும். பொங்கி எழு என மனோகரா சினிமாவில் வரும் வசனம் போல, நான் மாநகராட்சி கூட்டத்திற்கு பிரச்னைகளை பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர், ‘‘தாராளமாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். மாநகராட்சி மன்றத்தில் எந்த பாகுபாடும் இல்லை’’ என்றார். தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, ‘‘முல்லை பெரியாறு குடிநீர் விநியோகம் எப்போது நிறைவேறும்? என்னை தெர்மோகால் என்று ஓட்டுகிறார்கள். மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க இன்ஜினியர்கள் ஆலோசனையில், சோதனை முறையில் தெர்மோகோல் விட்டு ஆய்வு செய்தோம்.
என்னோடு கலெக்டர் வந்திருந்தபோதும், என்னை மட்டுமே வைத்து ஓட்டுகிறார்கள். வைகையாற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு சென்று நிரப்ப வேண்டும். மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி கேட்டுப் பெற வேண்டும்..’ என தொடர்ந்து பேசினார். மாநகராட்சி கூட்டத்தில் குறைகளை பற்றி பேசுவதை விட்டு, தன் பிரச்னையை பேசி குமுறுகிறாரே என செல்லூர் ராஜூ குறித்து கவுன்சிலர்கள் கமெண்ட் அடித்தனர்.
The post எத்தனை காலம்தான் என்னை தெர்மோகோல்னு ஓட்டுவீங்க…செல்லூர் ராஜூ மனக்குமுறல் appeared first on Dinakaran.