ARTICLE AD BOX
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீது சமீபகாலமாக பல வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இவருக்கு அடுத்த மாதம் 38 வயதாக உள்ளதால் அதன் பின் இவர் தொடர்ந்து இந்திய அணிக்கு விளையாடுவது கடினம் என்று கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் காத்துவாக்கில் வந்தவண்ணம் உள்ளது.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 2023-ம்ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், அதே ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை, கடந்த ஆண்டில் 20 ஓவர் உலகக் கோப்பை, இப்போது சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. ஐ.சி.சி. நடத்தும் 4 வகையான பெரிய சாம்பியன்ஷிப்பிலும் இறுதிப்போட்டிக்கு அணியை அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.
சமீபகாலமாக ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க போராடினாலும் அவரால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. இதற்கு இவரின் உடல் தகுதியும் அவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர் ரன் எடுக்க தடுமாறி வந்தாலும் யாரும் எளிதில் முறியடிக்க முடியாத சாதனைகள் சில அவர் வசம் இருக்கின்றன. அது பற்றிய தொகுப்பு இது.
‘ஹிட்மேன்’ என அழைக்கப்படும் ரோகித் சர்மா இதுவரை, ஒருநாள் போட்டிகளில் 11,092 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 4,301 ரன்களும், 20 ஓவர் போட்டிகளில் 4231 ரன்களும் எடுத்துள்ளார். அவர் வசம் இருக்கும் இந்த சாதனைகளில் சிலவற்றை, எதிர்காலத்திலும் எவராலும் முறியடிக்க முடியாது என்பது நிச்சயம்.
2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 264 ரன்கள் அடித்து சாதனை படைத்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனி நபராக ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்களை அடித்த வீரராக ரோகித் சர்மா விளங்குகிறார். இனி வரும் காலங்களில் வேறு எந்த வீரரும் அவ்வளவு ரன்களை அடிப்பது என்பது சவாலானது, கடினமானது.
டெஸ்ட் (88), ஒருநாள் போட்டி (341), 20 ஓவர் (205) என மொத்தம் 633 சிக்சர்களை அடித்ததன் மூலம் டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி என மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் அதிக சிக்சர்கள் அடித்த சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ல் 553 சிக்சர்களும், இங்கிலாந்து வீரர் பட்லர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து 358 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளதால் அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரோகித் சர்மா பெயர்தான் நெடுங்காலம் நீடித்திருக்கும்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை ரோகித் சர்மா மூன்று முறை இரட்டை சதங்களை அடித்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததில்லை மற்றும் எதிர்காலத்தில் இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாமல் போகலாம்.
இலங்கைக்கு எதிராக போட்டியில் 264 ரன்களில் 33 பவுண்டரிகள் அடித்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக பவுண்டரிகள் அடித்தவரும் ரோகித் சர்மாதான் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.
2019-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இவர் 5 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு தொடரில் அதிக சதங்கள் அடித்த பெருமையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
இப்படி பல்வேறு அசைக்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரரான திகழும் ரோகித் சர்மாவின் சாதனைகள் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.