ARTICLE AD BOX
”வழுக்கை தலையில் ஒருசில நாட்களிலேயே முடி வளரும்” எனச் சொல்லி விளம்பரம் ஒன்று செய்யப்பட்டிருந்தது. இதைக் கேட்டு பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள காளி மாதா கோயிலில், கடந்த 16ஆம் தேதி ஓர் இலவச முகாம் நடத்தப்பட்டது. வழுக்கையைக் குணப்படுத்துவதாகக் கூறி சங்ரூரின் பிலாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த அமன்தீப் சிங் என்பவர் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த முகாமில் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்களின் தலையில் எண்ணெய் போன்ற ரசாயனத்தைத் தடவியுள்ளனர்.
தங்கள் தலைகளில் இந்த ரசாயனத்தைப் பூசிக்கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கண் எரிச்சல் மற்றும் வலியால் பாதிக்கப்பட்டனர். எண்ணெய்யைப் பூசி 10 நிமிடங்களுக்குப் பிறகு தலையைக் கழுவியதாகவும், ஆனால் அதன்பின்னர் கண் எரிச்சல் ஏற்படத் தொடங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்களில் சிவத்தல், நீர் வடிதல் மற்றும் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுக்காக 65க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுகுறித்து காவல் துறையின் வழக்குப் பதிந்து முகாம் ஏற்பாட்டாளர் உட்பட இரண்டு பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.