ARTICLE AD BOX
ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு அதிகாரிகளுக்கு 200% போனஸ் வழங்கும் மார்க்.. இது நியாயமா?
சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதள செயலிகளின் தாய் நிறுவனமான மெடா ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு மூத்த அதிகாரிகளுக்கு மட்டும் போனஸை வாரி வழங்கி இருக்கிறது.
சர்வதேச அளவில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தொடர்ந்து ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. மார்க் ஜுக்கர்பெர்குக்கு சொந்தமான மெடா நிறுவனமும் அண்மையில் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை அறிவித்தது. சுமார் 5 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள மெடா நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் நிலையில் பணிபுரியும் குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு 200 சதவீத போனஸ் வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.

மெடா நிறுவனம் இது தொடர்பாக அமெரிக்க பங்குச்சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த ஆவணத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சில அதிகாரிகளுக்கு அவர்களுடைய அடிப்படை ஊதியத்தில் 200 சதவீத தொகையை போனஸாக வழங்க இருக்கிறதாம். இது முந்தைய ஆண்டு 75 சதவீதமாக தான் இருந்தது. இந்த அறிவிப்பால் குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கு பல மடங்கு சம்பளம் உயர்ந்துள்ளது.
ஆனால் இந்த போனஸ் மெடா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கும் மார்க்கிற்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெடா நிறுவனத்தின் வாரியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்றதாகவும் அதில் மூத்த நிலை அதிகாரிகளுக்கு 200 சதவீத போனஸ் தொகை வழங்குவதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான் மெடா நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 5 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்தது. நிறுவனம் எதிர்பார்த்த செயல் திறனை வெளிக்காட்டவில்லை என்ற காரணத்தை முன்வைத்து தான் மெடா ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது. அது தவிர ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிறுவன பங்கில் 10 சதவீதத்தை குறைத்து இருக்கிறது. இதனால் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பங்கு வளர்ச்சி மூலம் கிடைத்த லாபம் குறைந்துள்ளது.
ஊழியர்களை கைவிட்டு விட்ட மெடா நிறுவனம், மூத்த நிலையில் இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டும் ஊதியத்தை வாரி வழங்கி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மெடா நிறுவனத்தைப் பொறுத்தவரை கடந்த ஓராண்டு காலத்தில் இதன் ஒரு பங்கு மதிப்பு 47 சதவீதம் உயர்ந்து 695 டாலர்களாக இருக்கிறது. ஜனவரி மாதம் மெடா நிறுவனம் வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் அதன் வருமானம் 21 சதவீதம் உயர்ந்துள்ளது. நிறுவனம் லாபத்தில் இருக்கும் போது ஊழியர் பணி நீக்கம் அவசியம் தானா என்ற விவாதம் எழும் நிலையில் ஊழியர்களை புறக்கணித்து உயர் அதிகாரிகளுக்கு மட்டும் போனஸை வழங்கி இருப்பதும் சர்ச்சையாகி இருக்கிறது.
Story written by: Subramanian