ஊட்டி - மேட்டுப்பாளையம்: கோடை சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் தேதி அறிவிப்பு

6 hours ago
ARTICLE AD BOX

உதகை,

சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோடை கால சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி மேட்டுப்பாளையம் - உதகை இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையில் இம்மாதம் 28-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை சனி மற்றும் திங்கட்கிழமைகளில் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இதில், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 40 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். குன்னூர் முதல் உதகை வரையில் மொத்தம் 220 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும்.

மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 2.25 மணிக்கு உதகைக்கு வந்தடையும், காலை 11.25 மணிக்கு உதகையிலிருந்து புறப்படும் ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read Entire Article