உழைப்பும் முனைப்பான செயலாற்றலும்!

3 days ago
ARTICLE AD BOX

வாழ்க்கை என்றுமே இருளாக இருந்துவிடுமோ என்று கவலை கொள்ள வேண்டாம். கனவுகள் முளைப்பது இருளில்தான். ஆனால் வெறும் கனவு மட்டுமே காண்பதால் நம் இலக்கை அடைய முடியுமா? உழைக்காமலும் செயலாற்றாமலும் கனவு மட்டும் கண்டு கொண்டிருந்தால் வாழ்வில் வெற்றிபெற முடியுமா? நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும். விடாமுயற்சியும் உழைப்பும் இருந்துவிட்டால் எது வந்தாலும் எதிர்த்து சாதித்து விட முடியும்.

முடியாது என்பது முற்றுப்புள்ளி. முடியும் என்பது வெற்றிப்புள்ளி என்பதை மறக்க வேண்டாம். வாழ்வில் மாற்றங்கள் வேண்டுமென்றால் எதை செயல்படுத்த முடியவில்லையோ அதற்கு மாற்று யோசனையை செய்து செயல்படுத்தி உழைத்தால் வெற்றி நிச்சயம்.

எந்த இடத்தில் இருக்கிறோம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது முக்கியமில்லை. எங்கிருந்தாலும் நாம் நினைத்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா என்பதுதான் முக்கியம். அதற்குத் தேவை உழைப்பும் முனைப்பான செயலாற்றலுமே!

இதையும் படியுங்கள்:
சிந்திக்க வைக்கும் பொன் மொழிகள்..!
Hard work and diligence!

உறுதியான உழைப்பும் செயலாற்றும் திறனும் இருந்தால் நாம் செல்ல சரியான பாதை இல்லாத பொழுதும் நம் பாதங்களை பதிய வைத்து முயற்சி செய்ய புதிய பாதையை நம்மால் உருவாக்க முடியும். அதனால் எழும் விமர்சனங்களை காது கொடுத்து கேட்காமல், துவண்டு போகாமல் முன்னேறி சென்றுகொண்டே இருக்க வேண்டும். காலம் கடந்தாலும் நாம் கண்ட கனவு கரைந்து விடாமல் அடைய வேண்டிய லட்சியக் கனவை துரத்தி அடைய உழைப்பும், அதற்காக வெறித்தனமாக செயலாற்றும் குணமும் கொள்ளவேண்டும்.

செல்லும் புதிய பாதையில் தைக்கும்  முட்களைக் கண்டு வலிக்கிறது என்று ஒதுங்கி விடாமல் அதுவே நம்மை வலிமையாக்கும் என்று உணர்ந்து முன்னேறி செல்ல வேண்டும். சங்கடங்கள் நேரும் பொழுது தடுமாறாமல் நமக்குள் இருக்கும் திறனையும், மன உறுதியையும் வெளிக்கொணர வேண்டும். அப்பொழுதுதான் சோதனையைக் கடந்து சாதனை புரிய முடியும். உழைப்பை முதலீடு செய்ய அதுவே பல மடங்கு பெருகி சிறந்த பலனை பெற்று தரும்.

உறுதியான தேடல் இருந்தால் தேடியது கிடைக்காமல் போகாது. உழைப்பும் செயலாற்றும் உறுதியும் இருந்தால் வாழ்வில் உயர்வு நிச்சயம். தன்னம்பிக்கையும் முயற்சியும் இணைந்தால் தோல்வி நம்மிடம் தோற்றுத்தான் போகும்.

சவால்களையும் தடைகளையும் தாண்டித்தான் வரவேண்டும். பலரால் சாத்தியப்படாதது சிலரால் மட்டும் சாத்தியப்படுவதற்கு காரணம் சாதிக்க துடிக்கும் வெறியும், அப்படி சாதித்ததை கைநழுவிப் போகாமல் தக்க வைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியுமேயாகும்.

இதையும் படியுங்கள்:
எந்த மாதிரி விஷயங்களை முழுமையாக கைவிட வேண்டும்?
Hard work and diligence!

வாழ்க்கையே போர்க்களம்தான். அதில் வெற்றிபெற கடுமையாகப் போராடி உழைப்பதுடன், சிறந்த செயலாற்றலும், திட்டமிடலும் இருப்பது அவசியம். தடைகளைக் கண்டு துவண்டு நின்றுவிடாமல் தொடர்ந்து ஓடவேண்டும். எப்படி ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளைக் கண்டு நின்று விடாமல் வளைந்து, நெளிந்து, ஒதுங்கி ஓடி கடலில் சென்று கலக்கிறதோ அதுபோல் நாமும் எதிர்ப்படும் தடைகளை ஒதுக்கி அடைய வேண்டிய இலக்கினை சென்றடைந்து சாதிக்க வேண்டும். உழைப்பும் முனைப்பான செயலாற்றலும் இருந்தால் இவ்வுலகில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. 

உண்மைதானே நண்பர்களே!

Read Entire Article