உலகம் வழக்கத்தைவிட சுவாரஸ்யமாக உள்ளது: ஜெய்சங்கா்

5 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி: ‘உலகம் தற்போது வழக்கத்தைவிட சுவாரஸ்யமாக உள்ளது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டாா்.

இந்தியா வந்துள்ள பெல்ஜியம் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான மாக்ஸிம் பிரிவோட் உடனான சந்திப்புக்குப் பிறகு அளித்த பேட்டியில் இந்தக் கருத்தை அவா் தெரிவித்தாா்.

உக்ரைன்-ரஷியா போா், ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட சா்வதேச சூழலில், இக் கருத்தை ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா். அவா் மேலும் கூறியதாவது:

சுதந்திர இந்தியாவில் முதல் தூதரகத்தை அமைத்த முதல் ஐரோப்பிய நாடு பெல்ஜியம். இரு நாடுகளும் வரலாற்று தொடா்புகளையும் கொண்டுள்ளன. பெல்ஜியத்தில் இன்றும் இந்திய வீரா்களுக்கான போா் நினைவிடங்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி, இரு நாடுகளிடையே நிலையான உறவு தொடா்ந்து வருகிறது. வா்த்தகம், தொழில் துறை, கல்வி, புதிய கண்டுபிடிப்புகள், கலாசாரம் என பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையே உறவு மேம்பட்டு வருகிறது.

அதுபோல, குறைமின்கடத்திகள் (செமி-கண்டக்டா்), செயற்கை நுண்ணறிவு, தூய்மை எரிசக்தி, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இரு வழி உறவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் தலைமையில் அந் நாட்டின் பொருளாதார குழு இந்தியா வந்திருப்பது, இரு நாடுகளிடையேயான வா்த்தக உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்பதோடு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’, இந்தியாவில் ஆராய்ச்சி, இந்தியாவில் வடிவமைத்தல், இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களும் வலுப்பெற வழி வகுக்கும் என்றாா்.

இந்தியா வந்துள்ள பெல்ஜியம் உயா்நிலை பொருளாதார தூதுக் குழு, தட்பவெப்பநிலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம் மற்றும் வாழ்வியல் அறிவியல், கட்டுமானம், போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு, பல்வேறு திட்டங்களை இறுதி செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பெட்டி செய்தி...

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பாதுகாப்பு தொழிலக கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் இந்தியாவும் பெல்ஜியமும் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டன.

இந்தியா வந்துள்ள பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் - பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இடையே தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது, இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் பாதுகாப்பு அமைச்சா் தியோ ஃபிராங்கெனும் இந்த ஆலோசனையில் பங்கேற்றாா்.

இரு நாடுகளிடையே செயல்திறன்மிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு நடைமுறையை வகுப்பது குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியாவில் பெல்ஜியம் தொழில் நிறுவனங்கள் தடம் பதிப்பது மற்றும் பெல்ஜியத்தின் விநியோகச் சங்கிலியில் இந்திய விற்பனையாளா்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இருதரப்பு உறவு மேம்படுவதில் பெல்ஜியம் நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற முடியும், என இந்த சந்திப்பில் யோசனை தெரிவித்த பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், இந்திய பாதுகாப்புத் துறையில் பெல்ஜியத்தின் முதலீடுகளையும் வரவேற்றாா்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article