ARTICLE AD BOX
தமிழக அரசியலில் மும்மொழிக் கொள்கை, தமிழக அரசின் கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதி விடுவிக்காதது குறித்து தி.மு.க - பா.ஜ.க இடையே சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் மத்திய அரசின் பி.எம். ஸ்ரீ பள்ளிகளை அமைக்க வேண்டும், மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் அப்போதுதான் தமிழ்நாட்டுக்கு ரூ.2,152 கோடி நிதி விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பி.எம். ஸ்ரீ பள்ளிகளை அமைக்க வேண்டும், மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் அப்போதுதான் தமிழ்நாட்டுக்கு ரூ.2,152 கோடி நிதி விடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது அரசியலில் மேலும் உஷ்ணத்தைக் கூட்டியது. இதற்கு, தமிழகத்தில் பா.ஜ.க-வைத் தவிர, அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், மாணவர்கள் நலன் கருதி ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி, மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் பயனளிக்காது என்றும் வலியுறுத்தினார்.
தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், முன்பெல்லாம் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தால், கோ பேக் மோடி என்று கூறினார்கள். மீண்டும் இதே போல, வந்தால், தமிழக மக்கள் கோ பேக் மோடி என்றெல்லாம் சொல்லமாட்டார்கள். அவர்களை கெட் அவுட் மோடி என்று சொல்ல வைத்துவிடாதீர்கள் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, நீ சரியான ஆளாக இருந்தால், கெட் அவுட் மோடி என்று சொல்லிப் பார், நான் தனியாக அண்ணா அறிவாலயம் வருகிறேன் என்ன செய்கிறீர்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்.
உடனடியகாவே சமூக வலைதளங்களில் கெட் அவுட் #GetOutModi இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
அண்ணாமலை சவால் விட்டது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் ஊடகங்கள் கருத்து கேட்டதற்கு, முதலில் அவரை அண்ணா சாலைக்கு வரச்சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கெட் அவுட் ஸ்டாலின் (#GetOutStalin) என்று பதிவிட்டார். இதுவும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
இப்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் சவால் விட்டுக்கொண்டதால், சமூக வலைதளங்களில் தி.மு.க - பா.ஜ.க-வினர் ட்ரெண்டிங் யுத்தத்தில் இறங்கியதால் அது உதயநிதி vs அண்ணாமலை யுத்தமாக மாறியது.
தி.மு.க-வினர் கெட் அவுட் மோடி என்று எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்த நிலையில், பா.ஜ.க-வினர் கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்ரெண்ட் செய்து பதிலடி கொடுத்தனர். இதையடுத்து, பதிலுக்கு பெருசா தி.மு.க எதையாவது ட்ரெண்ட் செய்யும் அதற்கும் பதிலடி கொடுக்கலாம் என்று எதிர்பார்த்த பா.ஜ.க-வினருக்கு தி.மு.க போஸ்டர் வடிவில் பதிலடி கொடுத்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் தி.மு.க சார்பில், தமிழ் வாழ்க என்றும் அதன் கீழ் இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி மறைக்கப்பட்டு அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த போஸ்டர் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாற்றை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.