ARTICLE AD BOX
வேகமாக உலகம் மாறிவரும் சூழலில் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகி இருப்பது நமக்கு தெரிந்தது தான். சென்ற நூற்றாண்டைவிட இன்றைய கால, உணவு, வாழ்வியல் முறை, தூக்கம், வேலைப்பளு என எல்லாமே மாறிவிட்டது. வேலைப்பளு கூட மனஅழுத்தத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. மனஉளைச்சல் நிம்மதியை பாதித்து வாழ்வையே பாதிக்கிறது. அதனால் தான் மனநல மருத்துவமனைகள் புற்றீசல் போல பெருகிக் கொண்டு இருக்கிறது.
மன அழுத்தத்தின் காரணம்:
சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, இல்லத்தரசிகள், அலுவலகம் செல்வோர் என வயது வித்தியாசமின்றி பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். வேகமாக முன்னேறி வரும் நாட்டில் பொருளாதாரத்தில் பின் தங்குபவர்கள் மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் போதைப்பொருட்கள் கூட மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
விழிப்புணர்வு:
மனநலம் பற்றிய விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது என்பது ஆரோக்கியமான ஒன்று தான். இன்றைய காலங்களில் மனநலம் உடல்நலம் இரண்டும் வேறு இல்லை. மனநலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல்நலமும் ஆரோக்கியமாக இருக்கும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் தெளிவாக உள்ளது.
மனம் என்பது மூளையின் செயல்பாடுதான், அதனால் மன நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற தயக்கம் வேண்டாம். அதுவும் சரிசெய்யக்கூடியது என்பதை அனைவரும் அறிய வேண்டும்.
மனம் என்பதும், நம் உடலில் ஒரு பகுதிதான் என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் வந்தாலே வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை வரும்.
உளவியல் மருத்துவம்:
நம் இந்தியாவில், 15000 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில்தான் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். இது வெளிநாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. ஆனால் இங்கு மனநல பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன. தற்காலங்களில் ஊடகம், தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் மனநலம் சார்ந்த விழிப்புணர்வு அதிகம் ஏற்படுத்தப்படுகிறது. இந்த விழிப்புணர்வின் காரணமாக மனநல மருத்துவமனைகள் அதிகமாக தேவைப்படுகின்றன.
உளவியலில், நேர்மறை உளவியல் என்ற ஒரு வகை உள்ளது. அதாவது ஒருவருக்கு தொடர் மனநல பிரச்சனை இருந்தால் மட்டும் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும் என்றில்லை. ஒருவர், நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது மட்டும் பதட்டம் அடைகிறார் என்றாலும் கூட, அதற்கான ஆலோசனைகளையும் தருவது நேர்மறை உளவியல்.
அதனால் சில குறிப்பிட்ட திறன்களை மேம்படுத்த, நமது ஆளுமையை வெளிக்கொணர்ந்து வாழ்க்கைக்கு மதிப்பு கூட்ட, என பலவற்றிற்கும் மனநல ஆலோசனை பயன்படும். இதை உணர்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை நேர்மறையாக அழகாக கொண்டு செல்ல மனநல மருத்துவமனைகளை நாடுவது அதிகரித்துள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டால் தூக்கம் கெட்டு , இரத்த அழுத்தம் ஏற்பட்டு, அதனால் சர்க்கரை நோய் வரும், இதயம், சிறுநீரகம் பாதிக்கப்படும். ஏராளமான இதய நோய்களுக்கு முக்கிய காரணமே மன அழுத்தம் தான். அதனால் மனநலம் நன்றாக இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும்.